மகிழடித்தீவு வைத்தியசாலையில் துர்நாற்றம் – நோயாளர்களுக்கு அசௌகரியம்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மகிழடித்தீவு பொது வைத்தியசாலையில் துர்நாற்றம் வீசுவதாக இன்று(23) வெள்ளிக்கிழமை நோயாளர்கள் விசனம் தெரிவித்தனர்.
குறித்த வைத்தியசாலையின் கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டுள்ளமையினால் வைத்தியசாலையில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் வைத்தியசாலையில் இருக்க முடியாதுள்ளது. எனவும் நோயாளர்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் வினாவிய போது, மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினர், வைத்தியசாலையின் குப்பைகளை அகற்றி வந்த நிலையில், கடந்த மே மாதம் 01ம் திகதியிலிருந்து குப்பை அகற்றுவதற்காக வைத்தியசாலைக்கு பிரதேசசபையினர் சமூகம் கொடுக்கவில்லை. இது தொடர்பில் பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் உதவி உள்ளுராட்சி ஆணையாளர் போன்றோருக்கும், சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கும் அறிவித்துள்ளதாகவும், இதுதொடர்பில் எவ்விதமான பதில்களும் கிடைக்கவில்லையெனவும் குறிப்பிட்டார். மேலும் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போதும், இது தொடர்பில் தெரிவித்தும் எவ்விதமான தீர்வும் வழங்கப்படவில்லையெனவும் கூறினார்.
கழிவு அகற்றாமை குறித்து, மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளரிடம், வினாவிய போது, விடுதிக்கல் கிராமத்தில் தமது பிரதேசத்திற்கான கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. அக்குப்பையில் தீயேற்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள மக்கள் அவ்விடத்தில் குப்பை கொட்டவேண்டாம் எனக்கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து குப்பைகள் அகற்றுவதை நிறுத்தி, வீடுகளில் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றோம். வைத்தியசாலை போன்ற பொதுக்கழிவுகளை அகற்றி ஓரிடத்தில் சேகரிப்பதற்கான இடத்தினை பிரதேச செயலாளர் எமக்கு வழங்கவில்லை இதனால் வைத்தியசாலை கழிவுகளை அகற்றவில்லையென தெரிவித்தார்.
கழிவகற்றுவதற்கான இடம் வழங்கப்படாமை குறித்து பிரதேச செயலாளரிடம் வினாவிய போது, வைத்தியசாலையின் மலசல கூட கழிவுகளை அகற்றுவதற்கான இடமொன்றினை இனங்காட்டுமாறு பிரதேசசபையின் செயலாளர் கேட்டதற்கமைய, அதற்கான இடமொன்றினை இனங்காட்டியிருக்கின்றோம். ஆனால் உக்கக்கூடிய கழிவுகளை அகற்றுவதற்கான இடத்தினை வழங்குமாறு பிரதேசசபையினர் எம்மிடம் இதுவரையில் கோரவில்லையெனவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 50நாட்களுக்கு மேலாக, குப்பை அகற்றப்படவில்லை. இதனால் தனியார் கழிவுகளை விடுத்து, வைத்தியசாலை போன்ற பொது இடங்களில் கழிவுகள் தேங்கி நிற்கின்றது. இதனால் வைத்தியசாலைக்கு நோயாளர்களாக சென்று சிகிச்சைப் பெற்று செல்ல வேண்டிய நோயாளர்கள் இன்னும் நோய்களுக்கு ஆளாகும் ஆபத்தான நிலையும் இருப்பதாகவும், பிரதேசத்தில் தற்போதைய நிலையில் மழைபெய்து கொண்டிருப்பதினால் டெங்கு நோய் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது எனவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதேசத்தில் கழிவு அகற்றப்படாமையினால், மயானம், வயல்வெளிகள், ஆற்றாங்கரைப்பகுதிகள் போன்றவற்றிலும் இனந்தெரியோதர்களால் கழிவுகள் வீசப்படுவதாகவும் பிரதேசத்து மக்கள் குறிப்பிடுகின்றனர்.