சிறிது காலத்தில் கஸ்டப்பிரதேசங்களில் சேவையாற்ற ஆசிரியர்கள் இருக்காது.

(படுவான் பாலகன்)  தற்போதைய ஆசிரிய இடமாற்றக் கொள்கையின் அடிப்படையில் சிறிது காலத்தின் பின்பு கஸ்டப்பிரதேசங்களுக்கு சேவையாற்ற ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட படையாண்டவெளி பாடசாலையில், புதிய கட்டடம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா(23) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் விசித்திரமான கொள்கை பின்பற்றப்படுகின்றது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை மட்டக்களப்பு மேற்கு போன்ற வலயங்களில் நிலவுகின்றது. 25வயதில் ஆசிரியர் நியமனம் பெறும் ஒருவர் 35வருடம் ஆசிரிய சேவையில் சேவையாற்ற முடியும். அக்காலப்பகுதிக்குள் மூன்று அல்லது நான்கு வருடங்கள் கஸ்டப்பிரதேசங்களில் சேவையாற்றி விட்டு வசதியான பாடசாலைகளுக்கு சென்று விடுகின்றனர். இவ்வாறான நிலை தொடர்ச்சியாக சென்றால் கஸ்டப்பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களே இருக்கமாட்டர்கள். இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். தமது சேவைக்காலப்பகுதிக்குள் இருதடவைகளாவது கஸ்டப்பிரதேசங்களில் ஆசிரியர்கள் சேவையாற்ற வேண்டும்.

பட்டதாரிகள் தமக்கு வேலை வழங்குமாறு பல நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களுள் சிலருக்கு அண்மையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. அவற்றினை பெற்றவர்கள் சிலர், தமக்கு வழங்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாது. தமக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றிக்கு நியமனத்தினை பெற்றுத்தருமாறு எம்மிடம் கேட்கின்றனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை வசிப்பிடமாக கொண்டவர்கள் பலரும், தமது பிள்ளைகளை கற்பிப்பதற்காக நகர்புறங்களுக்கு இடமாற்றம் பெற்று சென்றிருக்கின்றனர். அவ்வாறானவர்களும் தமது உறவுகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தமது பிரதேச பாடசாலைகளில் சேவையாற்ற முன்வரவேண்டும். ஒரு சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்பாக தமது ஆசிரியசேவையை செய்கின்ற போதிலும் பலர் அர்பணிப்பற்றவர்களாவும் இருக்கின்றனர். கடந்த கால யுத்தத்தினால் எமது தமிழ் இனம் இழந்தவையில் கல்வியும் ஒன்றாக இருக்கின்றது. அக்கல்வியினை கட்டியெழுப்புவதற்கு எல்லோரும் ஒன்றுபட வேண்டிய தேவையும் இருக்கின்றது. எனவும் மேலுள்ளவாறு கூறினார்.