7000ஆசிரியர்களை உள்வாங்க கல்வியமைச்சர் திட்டமிடுகிறார்!

நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பட்டதாரிகள் வேலைகேட்டு மாதக்கணக்கில் போராடிவருகின்றனர். நாம் 116நாட்களையும் தாண்டி இங்கிருக்கின்றோம். ஆனால் எம்மை சற்றும் பொருட்படுத்தாமல் இவ்வாண்டுக்குள் மேலும் 7000ஆசிரியர்களை உள்வாங்கவிருப்பதாக கல்வியமைச்சர் கூறுகிறார்.அதற்குள் 2000 கணித விஞ்ஞான பட்டதாரிகளாம். அதாவது நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோமா?
இவ்வாறு அம்பாறைமாவட்ட  பட்டதாரிகள் நேற்று 116வது நாளில்(22-வியாழக்கிழமை) கருத்துரைத்தனர்.
காரைதீவில் பட்டதாரிகள் போராட்டத்திலீடுபட்டுவரும் பிரதேசத்தில் வெயில் வரட்சி  தாண்டவமாடுவதால் கடும் அசௌகரியத்தை தாங்கியவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர்.
அவர்கள்; அங்கு மேலும் கருத்துரைக்கையில்;:
கல்வியமைச்சர் இந்த நாட்டில்தான் இருக்கின்றாரா? என கேட்கத்தோணுகின்றது. இந்தளவு போராட்டம் இங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அவர் தன்பாட்டில் 7ஆயிரம் பேரை ஆசிரியராக இணைக்கவிருப்பதாகச் சொல்கிறார்.
வடக்கு கிழக்கில் அரச தொழில் கேட்டுப்போராட்டம் நடாத்துவோர் தமிழ்பேசுவோர் என்பதனாலா? இந்த அறிவிப்பு. ஏன் அதனை பட்டதாரிகளுக்கு வழங்கக்கூடாதா?
கிழக்குமாகாண முதலமைச்சர் 1700பட்டதாரிகளை உள்ளீர்க்க விண்ணபப்ங்களை கோரவுள்ளார். நாம் இத்திட்டத்திற்கு ஏலவே எதிர்ப்புத்தெரிவித்திருந்தோம். அது வாய்ப்பாக போய்விடும் என்பதற்காக நபம் அதிலிருந்து விலகி விண்ணப்பம் கோரப்படும்வரை பார்த்திருக்கின்றோம்.
 2012முதல் 2017வரையிலான அத்தனை பட்டதாரிகளையும் உள்ளீர்க்கும்வகையில் விண்ணப்பங்களைக்கோரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
.
மத்தியஅரசு திறைசேரி முகாமைத்துவப்பிரிவு சுமார் 5000பட்டதாரிகளை உள்ளீர்க்க தேவையான அங்கீகாரத்தை அனுமதியை வழங்கியிருப்பதாகச் சொன்ன முதலமைச்சர் ஏன் இவ்வாறு கட்டம் கட்டமாக என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றார் எனக்கேட்கவிரும்புகின்றோம்.
நிதி இல்லாவிட்டால் நாம் முதல் ஒருவருடத்திற்கு இலவசமாக அரசுக்காக பணியாற்றவிரும்புகின்றோம்.ஆனால் அனைவருக்கும் நியமனம் தரவேண்டும். சம்பளத்தை வேண்டுமானால் கட்டம்கட்டமாக வழங்குங்கள்.
வருட முறைப்படி நாம் சம்பளத்தை கட்டம்கட்டமாகப்பெற சித்தமாயிருக்கின்றோம். வேதனமில்லாமல் ஒருவருடகாலம் நாட்டிற்காகச் சேவையாற்ற தயாராகவிருக்கின்றோம். இதனை பாராளுமன்றகுழுக்களின் தலைவர் பேராசிரியர் மாரசிங்கவிடம் சொன்னோம். அவர் நெகிழ்ந்துபோனார். இன்று அவரது சத்தத்தையும் காணவில்லை. சம்பந்தன்ஜயாவின் சத்தத்தையும் காணவில்லை. காலஅவகாசம் தந்ததுதான் மிச்சம்.

நாம் உறுதியாயிருக்கின்றோம். அனைவருக்கும் அரசதொழில் கிடைக்கும்வரை நாம் இந்தஇடத்தைவிட்டு நகரமாட்டோம். என்றனர்.