அஹிம்சாவினால் ஆயித்தியமலை அ.த.க.பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஒரு அதிகஷ்டப்பிரதேச பாடசாலையாகும். நீண்டகால யுத்தத்தினாலும், ஒவ்வொரு வருடமும் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் அதிகமாக பாதிக்கப்பட்ட மிக வறிய மாணவர்களே இங்கு கல்வி கற்று வருகின்றனர்.

எல்லா மட்டத்திலுமான மாணவர்களை பரீட்சைக்குத் தயாராக்கும் நவீன வசதிகளும் வாய்ப்புக்களும் குறைந்த பாடசாலைகளே அனேகமாக தூரத்துக் கிராமங்களில் உள்ளன. அத்தகைய கிராமங்களில் ஒன்றுதான் ஆயித்தியமலை கிராமமும்..

இங்குள்ள மாணவர்களின் தேவை கருதி பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜாவிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்க அப்பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்று அஹிம்சா நிறுவனத்தின் தலைவரினால் அப்பாடசாலையின் அதிபர் பிறின்ஸ்லி பிரபாகரனிடம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிப்பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார், கல்வி அதிகாரி சுரநுதன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவரும் அஹிம்சா நிறுவனத்தின் ஆலோசகருமான த.வசந்தராஜா, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்