பழுகாமத்தில் புதிய இல்லக்கட்டிடம் திறப்பு

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக மனிதநேயப் பணிகளை ஆற்றிவரும் சமூக நலன்புரி அமைப்பின் அங்கமான திருப்பழுகாமத்தில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்லத்திற்கான புதிய கட்டட திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வானது சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் சா.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் 2017.06.20 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்தஜீ மகராஜ் அவர்களும், ஸ்ரீமத் சுவாமி ஸ்ரீவாசனானந்தஜீ மகராஜ் அவர்களும் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்ததோடு, நிர்மாணிக்கப்பட்ட அன்னை சாரதாதேவியின் சிலையினையும் திறந்து வைத்தனர். இக் கட்டடம் கட்டுவதற்கு அவுஸ்ரேலியா சிட்னி முருகன் ஆலயம், அவுஸ்ரேலியா மகளிர் இல்லம், கனடா, கனடிய தமிழர்கள் மனிதாபிமான சங்கம், இலண்டன் சமூகநலன்புரி அமைப்பு, அமெரிக்கா திரு.கார்த்திக் நடராஜா, இலண்டன் திரு.வைத்தியநாதசர்மா குமரேசன் ஆகியவர்களும் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்புலம்பெயர் உறவுகளும் நிதியுதவி வழங்கினார்கள்.


கட்டடத்திற்கு நிதிஉதவி வழங்கியவர்களின் வரிசையில் அழைக்கப்பட்ட விசேட அதிதிகளில் இலண்டனில் இருந்து வருகை தந்த திரு.வைத்தியநாதசர்மா குமரேசன் அவர்களின் பாரியாரும் குடும்பத்தினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். அத்தோடு அதிதிகளாக மாவட்ட சிரேஸ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.எஸ்.சிவகுமார் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழக பிள்ளை நலத்துறை பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திரு.சசிதரன் அவர்களும்;, களுவாஞ்சிகுடி, ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி கு.சுகுணன் அவர்களும், திருப்பழுகாம் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி.எஸ்.காண்டீபன் அவர்களும், திருப்பழுகாமம் வங்கி முகாமையாளர்களும் மற்றும் ஏனைய பல அதிதிகளும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள், சமூக நலன்புp அமைப்பின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பயிற்றுனர்கள், பயிலுனர்கள், இராமகிருஷ்ண மிஷன் சிறுவர்கள், சாரதா மகளிர் இல்ல சிறுமிகள், விபுலானந்த சிறுவர் இல்ல சிறுவர்கள், திலகவதியார் இல்ல சிறுமிகள், இல்ல நிருவாகசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் இல்லக் குழந்தைகளின் பாடல், நடனம் என்ற பல நிகழ்வுகள் நடைபெற்றது. அத்தோடு இலண்டனில் வசிக்கும் சமூக நலன்புரி அமைப்பின்; ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களால் வாழ்த்துச் செய்தி வழங்பட்டதுடன், திருப்பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்ல மாணவர்களுக்காக 4 கணினி இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு கோட்டைக்கல்லாறு, தெய்வநெறிக் கழக அறநெறிப்பாடசாலை அதிபர் திரு.ந.இராசரெத்தினம் அவர்களால் இல்லக் குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இந்த திலகவதியார் மகளிர் இல்லமானது இப் பிரதேசத்தில் அநாதரவாக்கப்பட்ட சிறுமிகளுக்கான சிறப்பான சேவையினை ஆற்றியதற்கான ஆதாரமாகவே பிரதேச செயலகத்தின் ஊடாக அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் இந்த புதிய கட்டம் கட்டப்பட்டு திறப்புவிழா காண்கின்றது.