வளங்களை கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் பெறுவதற்கு எங்கே செல்லப் போகின்றோம்.

(படுவான் பாலகன்) பிரதேசத்திற்குள்ளே இருக்கின்ற வளங்களை நாமே பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான வளங்களை வெளியில் உள்ளவர்களுக்கு கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் நாம் அவ்வளத்தினைப் பெறுவதற்கு எங்கு செல்லப்போகின்றோம். என மண்முனை தென்மேற்கு பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன் தெரிவித்தார்.

ஜனதாக்சன் நிறுவனத்துடன் இணைந்து மண்முனை தென்மேற்கு பிரதேசபையினால் முன்னெடுக்கப்படும், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களை வலுவூட்டும் செயற்றிட்டத்தின் கீழ், சனசமூக நிலையங்களுக்கான காகிதாதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(20) மாலை செவ்வாய்க்கிழமை பிரதேசசபை கட்டத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

உதவி திட்டமிடல் பணிப்பாளர் தொடர்;ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

மண்முனை தென்மேற்கு பிரதேசம் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டது. அவ்வாறான பிரதேசத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்காக கட்டிடங்களை மட்டும் கட்டுவதினால் அபிவிருத்தி இடம்பெறாது. கல்வி, கலை போன்ற செயற்பாடுகளிலும் அபிவிருத்தி காணவேண்டும். கல்வியில் இடர்பட்டு நிற்கும் எமது சமூகத்தினை முன்னேற்றுவதற்கு பணவசதி படைத்தவர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், அமைப்புக்கள், முன்னோடிகள் முன்வரவேண்டும். அப்போதுதான் எல்லோரும் இணைந்து பிரதேசத்தினை அனைத்து வளங்கள் உள்ள பிரதேசமாக மாற்றியமைக்க முடியும்.

பிரதேசத்திற்குள்ளே இருக்கின்ற வளங்களை நாமே பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான வளங்களை வெளியில் உள்ளவர்களுக்கு கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் நாம் அவ்வளத்தினைப் பெறுவதற்கு எங்கு செல்லப்போகின்றோம். நாம் மட்டும் வாழ்ந்துவிட்டால் போதாது எமக்கு பின்னால் இருக்கின்ற எமது சந்ததியும் நாம் அனுபவிக்கின்ற வளங்களை பயன்படுத்த வேண்டும். அதற்காக எமது வளத்தினை நாமே பாதுகாக்க வேண்டும். வளங்கள் என்பது, அதிகரிப்பதில்லை. ஆனால் தேவைகள் அதிகரித்து செல்லும். அவ்வாறான அபிவிருத்திகளை செய்யும் போது எமது சந்ததியை அவை பாதிப்பதாக இருக்காமால், பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.

கடந்த வருடத்தில் எமக்கு வழங்கப்பட்ட சுற்றுநிருபத்தில் சங்கங்களுக்கு அபிவிருத்தி வேலைகள் வழங்கக் கூடாது எனக்கூறப்பட்டிருந்தது. இந்த வருடம் இரண்டு இலட்சத்திற்கு குறைவான வேலைகளை வழங்கலாம் எனக்கூறப்பட்டது. தற்போது அண்மையில் அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் ஐந்து இலட்சத்திற்கு குறைவான வேலைகளை வழங்கலாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சுற்றுநிருபத்தில் மாற்றங்கள் ஏற்படாதவிடத்து பிரதேச செயலாளரின் அனுமதியுடன் எதிர்காலத்தில் சங்கங்களுக்கு அபிவிருத்தி வேலைகளை வழங்குவதற்குரிய வாய்ப்பிருக்கின்றன. என்றார்.