தமிழ் சமூகத்திடையே ஒற்றுமையின்மையினால்தான் மயானத்திலும் சண்டையிடுகின்றோம்.

(படுவான் பாலகன்) தமிழ் சமூகத்திடையே ஒற்றுமை என்பது குறைவாகவே இருக்கின்றது. இதனை எல்லாவிடயங்களிலும்; அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது. அது இல்லாமையினால்தான் மயானத்திலும் சண்டை இடுகின்றோம். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

சனசமூக நிலையங்களை வலுவூட்டும் செயற்றிட்டத்தின் கீழ், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு காகிதாதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(20) செவ்வாய்க்கிழமை பிரதேச சபை கட்டடத்தில் நடைபெற்ற போதே, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

நாம் விரும்பியோ! விரும்பாமலோ! எல்லோருக்கும் கிடைக்க கூடியது, மரணம் என்ற ஒன்று மட்டுமே. அவ்வாறான மரணச்சடங்கின் போதும் மயானத்தில் சண்டையிடும் சமூகமாக நாம் இருக்கின்றோம் என்று எண்ணி வெட்கித்தலை குனியும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. எம்மிடத்திலே சகலவிடயங்களிலும் ஒற்றுமை ஏற்பட வேண்டும். ஒற்றுமையின் மூலமாகதான் சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும். இதற்காக இன்றிலிருந்து, அனைத்து சனசமூக நிலையங்களும் திடசங்கற்பம் பூண வேண்டும். சமூகத்திற்காக உழைப்பவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.

சனசமூக நிலையங்கள் என்றால், வாசிகசாலைகளை நடாத்தும் அமைப்பு என்ற எண்ணம்தான் கடந்த காலங்களில் இருந்தன. அக்காலத்தில் வாசிகசாலைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தன. இன்றைய நிலையில் எமது சமூகத்தினர் வாசிகசாலைகளை பயன்படுத்துகின்ற வீதம் எவ்வாறிருக்கின்றதென்றால் மிக மிக குறைவேயாகும். வாசிப்பு பழக்கம் இன்மையினால் தேடல் இல்லை. தேடல் இல்லாமையினால் பரந்துபட்ட அறிவு, ஆற்றல், கிரகித்தல் போன்ற திறன்களும் வளர்க்கப்படதாவர்களாக எமது இளம்சந்ததியினரும் இருந்து கொண்டிருக்கின்றனர். புத்தகங்கள், பத்திரிகைகளை வாசிப்பதனை விடுத்து, கையடக்க தொலைபேசிகளையே பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலை உருவாகியிருக்கின்றது. இன்னும் சிறிது காலத்தில் பத்திரிகைகளை, புத்தகங்களை வாசிக்கின்றவர்களின் எண்ணிக்கை மிகவாக குறைந்து செல்லும் ஆபாயநிலையும் இருக்கின்றன. இவற்றினை மாற்றியமைக்க வேண்டும் ஒவ்வொருவரையும் பரந்துபட்ட அறிவுள்ளவர்களாக, சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துச்செல்பவர்களாக உருவாக்க வேண்டும். இதற்கான உத்திகளையும் சமூக அமைப்புக்கள் கையாள வேண்டும்.

மதுபானசாலைகளை மூட வேண்டும் என்று கூறுகின்றோம், அதற்காக கடிதங்களை அனுப்புகின்றோம். இவ்வாறான வழிகளைவிட சிறந்த உபாயங்கள் மதுபானசாலைகளை மூடுவதற்கு இருக்கின்றன. குறிப்பாக மதுபானசாலைகளை நாடி செல்பவர்களை இல்லாமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் கடிதங்கள் அனுப்ப வேண்டிய தேவையிருக்காது, ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டிய தேவையும் இருக்காது. தானாகவே மதுபானசாலைகள் மூடப்படும். அவ்வாறான உபாயங்களை பிரயோகிக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும். கூட்டுப்பொறுப்புடன் செயற்பட்டால் மட்டுமே எதனையும் வெல்லக்கூடிய வாய்ப்பு எமக்கு கிடைக்கும். எமது பிரதேசத்தினை கட்டியெழுப்ப எம்மால்தான் முடியும். அதற்காக எல்லோரும் கூட்டாக இணைந்து செயற்படுவோம். எனவும் பிரதேச செயலாளர் கூறினார்.