வட மாகாணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிலைமை மிகவிரைவில் சுமூகமான ஒரு நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எந்தவிதமான பிரிவுகளும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதனை சர்வதேச சமூகமும் விரும்பாது என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு பண்குடாவெளி றோமன் கத்தேலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் ,

மலையகத்தை பொறுத்த வரையில் நாங்கள் கடந்த காலங்களில் பிரிந்து நின்று செயற்பட்டதன் காரணமாக எமக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக நாங்கள் தற்பொழுது தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அனைவரும் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதனால் நாம் பல வெற்றிகளையும் பெற்றிருக்கின்றோம்.
எனவே வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முதலமைச்சர் தொடர்பான நிலைமை காரணமாக தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் எந்த விதமான பிளவுகளும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எனது கருத்தாகும் என்று குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் வடகிழக்கில் பல அமைப்புகள் பிரிந்து நின்று செயற்பட்டதால் இழப்புகளே அதிகம் ஏற்பட்டதே தவிர எந்த பயனும் அல்லது நன்மையும் கிடைக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரித்துவிட வேண்டும் என்பதில் இனவாதிகள் பலரும் மிகவும் உண்ணிப்பாக செயற்பட்டு வருகின்றனர்.அதற்கு ஒரு போதும் சந்தர்ப்பம் வழங்க கூடாது என்று இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவரன் ஆகிய இருவரும் விடயங்களை நன்கு தெரிந்தவர்கள். எனவே அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு குடும்ப பிரிச்சினையாக கருதி சுமூகமான பேச்சுவார்த்தை மூலமாக இதனை தீர்க்க வேண்டும் என்பதே மலையக மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.
இன்று இந்த பிரச்சினை தொடர்பாக அனைத்து தரப்பினரும் மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றனர். எனவே எங்களுடைய செயற்பாடுகள் காரணமாக இனவாதிகளின் கரங்கள் ஒங்கிவிடக் கூடாது. இது தொடர்பாக மிக விரைவில் ஒரு நல்ல தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எமது சமூகத்தில் மதிக்ககூடிய மனிதராக உள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகவும் மதிக்க கூடியவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து செயற்படுகிறார்.
இவர்கள் இருவருக்குமிடையில் ஒற்றுமை ஏற்பட்டு தமிழ்கள் தமது சொந்த மண்ணை ஆளக்கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுமே தவிர பிரிந்து மாகாணத்தை சின்னாபின்னமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட கூடாது.
வட மாகாணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு. அதை நாங்கள் சரியான முறையில் கையாள வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஜீ..ஸ்ரீநேசன், எஸ்.வியாழேந்திரன் , கோடீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்