ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தயார்; கேப்பாபுலவு மக்கள்

சண்முகம் தவசீலன்

 

தங்களுடைய பிரச்சினைகளில் மாத்திரமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தலையிடுவதாகவும் மக்களின் பிரச்சினைகளில் எந்தவித அக்கறையுமின்றி உள்ளதாகவும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், தமது காணி விடுவிக்கப்படும் என வாக்குறுதியளித்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும், தமக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக, தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இன்றுடன் 112 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை கடந்த மாதம் நேரடியாகச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கடந்த 18 ஆம் திகதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என மக்களிடம் உறுதியளித்திருந்தார்.

எனினும் அவர் வழங்கிய காலக்கெடு முடிவடைந்த நிலையில், காணிகள் விடுவிக்கப்படாமல் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாம் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தமது காணிகளை விடுவிப்பதாக கூறிய நிலையில் பெரும் மகிழ்ச்சியில் இருந்த தமக்கு தற்போது பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தாயொருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அமைதியான முறையில் இதுவரை போராட்டத்தை மேற்கொண்ட தமக்கு விரைவில் தீர்வு கிடைக்கவில்லை எனின் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் கேப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்