சவாலாகப்போகும் கிழக்கு மாகாணசபையும் தடுமாறப்போகும் கட்சிகளும்;.

(படுவான் பாலகன்)

கிழக்கு மாகாணத்தில் தற்போது அமையபெற்றுள்ள மாகாணசபை அங்கத்தவர்கள் பொறுப்பேற்று ஐந்து வருடங்கள் நிறைவுற இருக்கின்ற இத் தருணத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலினை குறிவைத்ததான பேச்சுக்களும் அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியை யார் கைப்பற்றுவது என்றதான போட்டி நிலைமையும் உருவாகியிருக்கின்றது. இந்நிலையில் கிழக்கு மாகாணம் தொடர்பில் ஆராய்கின்ற போது, கிழக்கு மாகாணம், 2007ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில், மொத்தமாக 9996km2 நிலப்பரப்பினையும், 1,460,899 மக்கள் தொகையினையும் கொண்டுள்ளது. இவற்றுள் அம்பாறை மாவட்டம் 4415km2 நிலப்பரப்பையும், 610,719 மக்கள் தொகையையும், மட்டக்களப்பு மாவட்டம் 2855km2 நிலப்பரப்பையும், 515,817 மக்கள் தொகையையும், திருகோணமலை மாவட்டம் 2727km2 நிலப்பரப்பையும், 334,363 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.


1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்ததை அடுத்து இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 1988ம் ஆண்டு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, 2006 யூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜெயவர்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து 2007 ஜனவரி 1 இல் வட கிழக்கு மாகாணசபை வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணசபை தனியாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, கிழக்கு மாகாணத்திற்கான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் 2008ம் நடாத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில கட்சிகள் என நாட்டில் செல்வாக்குள்ள கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் 08 ஆசனங்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 06ஆசனங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 04 ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 18 ஆனங்களுடன், மேலதிக 2ஆசனங்களையும் பெற்று மாகாணசபையின் ஆட்சியினை கைப்பற்றியது. இதில் ஐக்கிய தேசிய கட்சி அம்பாறை மாவட்டத்தில் 06ஆசனங்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 04 ஆசனங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 05ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 15ஆசனங்களை மாகாணத்தில் பெற்றுக்கொண்டது. மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தினை திருகோணமலையிலும், தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சியொன்று மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தினையும் பெற்றுக்கொண்டது. இதனால் ஆட்சியை பொறுப்பேற்பதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு பிரச்சினைகள் இருக்கவில்லை. இத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னை முழுமையாக பிரதிநித்துவப்படுத்தி இறங்கவில்லை. இதற்கு காரணம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவிருந்தது. இதனால் தேர்தலில் களமிறங்கவில்லை.
கிழக்கு மாகாண முதல் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான ஆட்சி கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், மாகாணசபைக்கான ஆயூட்காலம் நிறைவுபெறதா நிலையிலும், 2012ம் ஆண்டு கிழக்குமாகாணசபை கலைக்கப்பட்டு அதே ஆண்டு தேர்தல் இடம்பெற்றது. இத்தேர்தல் 2008ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலைவிட முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டது. இதனால் போட்டிகளும் அதிகரித்திருந்தன. இதற்கு காரணம் கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் வாழ்கின்றபோதிலும், அதிகளவாக தமிழர்களும் வாழ்கின்றனர். இதனால் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, தமிழ் மக்கள் அதிகம் ஆதரிக்கின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிட்டது.
முப்பத்தேழு பேரினை தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் 05 ஆசனங்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 04ஆசனங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 03ஆசனங்களுமாக, 12ஆசனங்களுடன், மேலதிகமாக இரண்டு ஆசனங்களுடன் மொத்தமாக 14ஆசனங்களையும் பெற்று அதிகூடிய ஆசனங்களை பெற்ற கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவுசெய்யப்பட்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் 02 ஆசனங்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 06ஆசனங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 03 ஆசனங்களுமாக மொத்தம் 11ஆசனங்களைப்பெற்று இரண்டாவது பெரும்பான்மை கட்சி என்ற ஸ்தானத்தினை பெற்றுக்கொண்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் 04ஆசனங்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தினையும், திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் பெற்று மூன்றாவது பெரும்பான்மை என்ற இடத்தினை வகித்தது. மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி 04 ஆசனங்களையும், தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தினையும் பெற்றுக்கொண்டது. இவ்வாறான நிலையில் எந்ததொரு கட்சியும் தனித்துநின்று ஆட்சி செய்ய முடியாத நிலை கிழக்கு மாகாணசபைக்கு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தினை நிலைநிறுத்திக்கொண்டது. இவ்வாட்சி நடவடிக்கைகள் 2015ம் ஆண்டுவரை நீடித்தது. 2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று, ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு, ஐக்கியதேசிய கட்சி போன்றன இணைந்து நாட்டினை ஆட்சி செய்தனர். இதனால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டன. தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளைச் சேர்ந்த 27பேர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தின் ஆட்சி, அதிகாரித்தினை பெற்றுக்கொண்டனர். இதன் முதலமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹாபிஸ் நசீர் அஹமட் பதவி வகித்து வருகின்றார். அத்தோடு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவருக்கு அமைச்சுப்பதவியும், ஒருவருக்கு பிரதிதவிசாளர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் மாகாணத்தின் ஆட்சி, அதிகார ஆயூட்காலம் நிறைவுபெறுவதற்கான காலம் நெருங்கி வருகின்றன.
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டதன் பின்பும், இடம்பெறவிருக்கின்ற தேர்தலும், தமிழ் மக்களுக்கு முக்கியமானதாகவும், போட்டிமிக்கதாகவும் பார்க்கப்படுகின்றது. இவ்வாறான தருணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியலில் இறுதிப்பயணத்தில் நின்றுகொண்டிருப்பதாகவும், தமிழ்தேசிய கூட்டமைப்பு செல்வாக்கு பெறும் தொகுதிகளில் இனிவரும் தேர்தலில் வேறுகட்சிகள் அமோக வெற்றியீட்டும் எனவும், அரசியல்வாதிகளால் கூறப்பட்டு வருகின்றன. இவ்வாறான விடயங்கள் ஒருபக்கமாக இருந்தாலும் கிழக்கு மாகாணத்தினை தனியொரு கட்சி, ஆட்சி அமைப்பதென்பது முடியாததொன்றாகவே அமையும். இதற்கு காரணம் மாகாணத்தின் சனத்தொகை விகிதங்களுக்கிடையிலான வித்தியாசம் மிகக்குறைவாகவே இருக்கின்றன. இன்னோர்பக்கம் மாகாணத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி போன்றன செல்வாக்கு பெற்ற கட்சிகளாவே இருக்கின்றன. ஆனாலும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு கடந்த தேர்தலில் 14ஆசனங்களைப் பெற்றிருந்தாலும், இனிவரும் தேர்தலில் குறைவான ஆசனங்களை பெறுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இதற்கு காரணம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் உள்ள சிலர், கூட்டு எதிரணியினரின் பக்கமாக இருப்பதினால் இவ்வாறனவர்கள் வேறு, கூட்டமைப்பில் இருந்து பிரிந்து அதற்குள் உள்ள வேறு கட்சிகளில் தேர்தலில் களமிறங்க வாய்புள்ளது. நாட்டின் தற்போதைய ஆளும்கட்சியாக ஐக்கியதேசிய கட்சியும் இருக்கின்றமையினால், ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு மாகாணத்தில் அதிகரிக்கலாம் என்றதான கருத்தும் இருக்கின்றன. அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் அதிகரிப்பதற்கான ஒரு சில சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை எனவும் அரசியல் விமசகர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இருகட்சிகளும் கடந்த காலங்களில் பெற்ற ஆசனங்களை விட அதிகமான ஆசனங்களை பெற்றால்தான் இருகட்சிகளும் நாட்டினது ஆளும் கட்சி என்றவகையில், கிழக்கு மாகாணத்திலும் இரு கட்சிகளும் இணைந்து ஆளும் கட்சிகளாக மாறி, ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்ற முடியும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை இடத்தினை பெறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. எனினும் கடந்த தேர்தல்களின் அனுபவங்களின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்புடனோ, தமிழ்தேசிய கூட்டமைப்புடனோ இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பங்களிப்பை வழங்கக்கூடிய கட்சியாக அமைய சந்தர்ப்பம் இருக்கின்றது. இதனால் கடந்த காலங்களைப் போன்று தமக்கு முதலமைச்சர் பதவியினையோ அல்லது வேறு அமைச்சுப்பதவிகளையோ வழங்கவேண்டும். என்ற உடன்பாட்டில் இணைவதற்கு சாத்தியம் இருக்கின்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த தேர்தலில் 2ம் ஸ்தானத்தினைப் பெற்றுக்கொண்டது, என்ற வகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு மாகாணத்தில் தனித்துநின்று ஆட்சி அமைக்கமுடியாத நிலையே இருக்கின்றது. இன்னொரு கட்சியின் ஆதரவினைக்கொண்டே ஆட்சி அமைப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. அவ்வாறு ஆட்சி அமைக்கின்ற சந்தரப்பத்தில் மாகாணத்தினது முதலமைச்சரை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெறுவதற்கு வாய்ப்பிருக்கின்றன. தமிழ்தேசிய கூட்டமைப்பு தனித்துநின்று ஆட்சியமைப்பதாகவிருந்தால் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம், சிங்களம் ஆகிய இனத்தினைச் சேர்ந்த அந்த சமூகத்திலே செல்வாக்கு உள்ளவர்களை உள்வாங்க வேண்டும். அவ்வாறு அவர்கள் உள்வருவதாகவிருந்தால், அவர்கள் அமைச்சுப்பொறுப்புக்களை கேட்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அதேவேளை அங்குள்ள மக்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினை எவ்வகையில் ஆதரிப்பர் என்ற வினாவும் இருக்கின்றது. இந்நிலையில் மாகாணசபையினை தனித்துநின்று ஆட்சி செய்வதென்பது கடினமானதொன்றே.
கடந்த தேர்தலிலே தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து நான்காயிரத்தி ஆறுநூற்றி எண்பத்தி இரண்டு (104,682) வாக்குகளையும், அம்பாறை மாவட்டத்தில்; நாற்பத்தி நான்காயிரத்தி எழுநூற்றி நாற்பத்தொன்பது (44,749) வாக்குகளையும், திருகோணமலை மாவட்டத்தில் நாற்பத்தி நான்காயிரத்தி முந்நூற்றி தொன்னிற்றி ஆறு (44,396) வாக்குகளையும் பெற்று மொத்தமாக மாகாணத்தில் ஒரு இலட்சத்து தொண்ணிற்றி மூவாயிரத்து எண்ணூற்றி இருபத்தேழு (193,827) வாக்களையே பெற்றுக்கொண்டது. மாகாணத்தில் முதலிடத்தினைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு இரண்டு இலட்சத்து நாற்பத்தி நான்கு (200,044) வாக்குகளை பெற்றிருந்தது. இதனடிப்படையில் ஆறாயிரத்தி இருநூற்றி பதினேழு (6217) வாக்குகள் வித்தியாசத்திலே கடந்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. அவ்வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்றிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்ற ஆசனங்களான 14ஆசனங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்றிருக்கும். இனிவரும் தேர்தலில் அவ்வாசனத்தினை அல்லது அதைவிட இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆசனங்களை பெறுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கலாம். அதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. தற்போது இருக்கின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்களை தவிர்த்து, வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றியீட்டிய இன்னும் மூன்று தமிழர்கள் மாகாணசபையின் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். இவ்வகையில் பார்க்கின்ற போது 17க்கு மேற்;பட்ட ஆசனங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த காலத்திலும் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலையேற்பட்டபோது, தமிழ் அங்கத்தவர்கள் தாமும் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைவதாக குறிப்பிட்டிருந்தனர். அச்சந்தர்ப்பத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அதற்கு இசைவு கொள்ளவில்லை. இவ்வாறான நிலைகளில் மாகாணத்தில் 17ஆசனங்களை பெறுவதென்பது, எவ்வகையில் சாத்தியமாகும் என்பது உயர் தலைமைகள் தெரிவு செய்யும், வேட்பாளர்கள் தெரிவிலே தங்கியிருக்கின்றது.
தமக்கு தெரிந்தவர்கள், தமக்கு பின்னால் வருகின்றவர்கள் என்ற முகஸ்துதிதியின் அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறுமாயின் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே பெற்ற ஆசனங்களையும், மீண்டும் இழக்கும் நிலைகூட ஏற்படலாம். மக்களின் அங்கீகராத்துடன், மக்கள் செல்வாக்கு வைத்துள்ளவர்களை இனங்கண்டு அவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்யும்பட்சத்திலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆசனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்பில் சில விமர்சனங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மாலைக்கும், கௌரவத்திற்கும் ஆசை கொள்பவர்கள் உள்வாங்கப்பட்டால் கூட்டமைப்பின் வாக்கு குறைவடைய சந்தர்ப்பம் ஏற்படும். பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் பேசப்படுகின்ற சூழலும் இருக்கின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து நிற்கின்ற சில கட்சிகளும் மாகாணதேர்தலில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இதனாலும் வாக்குகள் பிரிவதற்கும் அதிக சந்தர்ப்பம் உள்ளது. எல்லோரையும் ஒன்றிணைத்து செயற்பட்டால் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு வழியேற்படும். தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைக்கப்படுமா? என்ற வினாவும் இருக்கின்றது. தாம் முதலமைச்சரை பெறாமையினால், குறைந்த காலத்திற்கே அமைச்சு பதவியினை பெற்றமையினால் எம்மால் தற்போதைய நிலையில் அபிவிருத்திகளை தமிழ்பிரதேசங்களில் செய்ய முடியாதுள்ளது. அரசியலில் குறிப்பாக ஆளும்கட்சிகளாக, அமைச்சர்களாக புதிதாக உள்வாங்கப்பட்டிருக்கின்றமையினால் இப்போதுதான் கற்றுவருகின்றோம் என்ற கருத்துக்களையும் தமிழ்தேசிய கூட்டமைப்பை சார்ந்தவர்கள் சிலர் கூறிவருகின்றனர். இவ்வாறான கருத்துக்களை தொடர்ச்சியாக மக்களிடம் விதைத்து வரமுடியாது. அவ்வாறு விதைக்கும் கருத்துக்களை கேட்பதற்கும் மக்கள் தயாராகவும் இல்லை.

 

மீண்டும் முதலமைச்சர் பதவியை தவறிவிட்டு இன்னும் ஐந்து வருடங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு கழிக்க நினைத்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு செய்யும் மிகவும் துரோகச் செலவாகவே அமையும். தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மிகவும் சவாலான தேர்தலாகவே கிழக்கு மாகாணசபை தேர்தல் அமையவிருக்கின்ற நிலையில், அனைத்து மக்களும் விரும்புகின்ற முதலமைச்சர் வேட்பாளரை வெளிப்படையாக தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிவித்து தேர்தலில் இறங்க வேண்டும். இதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு கதிரைகளில் இருந்து கொண்டு தேர்தல் காலங்களுக்கு மட்டும் மக்கள் மத்தியில் செல்லுவதாகவும் இருக்ககூடாது.

 

போட்டிமிக்க, சவால்மிக்க தேர்தலாகவும் அமையவுள்ளமையினால் அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது தமிழ்தேசிய கூட்டமைப்பின் கடமையாகும்.