வெற்றிடமான அமைச்சு பதவிகள்; முதலமைச்சர் பொறுப்பேற்பு

வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பம் சமரசத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளபோதும், வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்னமும் உத்தியோகபூர்வமாக மீளப்பெறப்படவில்லை.

கொழும்பு சென்றிருக்கும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணம் திரும்பினால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜினாமா செய்த அமைச்சர் ஐங்கரநேசனின் அமைச்சுப் பொறுப்பை முதலமைச்சர் ஏற்க இருக்கும் அதேநேரம், விடுமுறையில் செல்லுமாறு முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்த மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன் மற்றும் டொக்டர் சத்தியலிங்கம் ஆகியோரும் தமது பதவிகளைப் பொறுப்பேற்பர்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற கடிதப் பரிமாற்றத்துக்கு அமைய மாகாண சபையின் அரசியல் பதற்றம் சுமுகநிலைக்கு கொண்டுவரப்பட்டது.

முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுவதாக சம்பந்தன், ஆளுநருக்கு அறிவித்துள்ளபோதும், ஆளுநர் யாழ்ப்பாணத்தில் இல்லாமையால் இது இன்னமும் உத்தியோகபூர்வமாக மீளப்பெறப்படவில்லை.

ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இன்று யாழ்ப்பாணம் திரும்புவாரென எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகிறது.

இன்றைய தினம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளது. கல்வி அமைச்சராகவிருந்த குருகுலராஜாவை இன்னமும் இராஜினாமா கடிதத்தை கையளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய தினம் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பிரச்சினை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதுடன், இது தொடர்பாக தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், நேற்று மாலை ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்த மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்த சமரச முயற்சிகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

இராஜினாமா செய்யும் இரண்டு அமைச்சர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளன. கல்வி அமைச்சராக சர்வேஸ்வரன் நியமிக்கப்படலாமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்விதமிருக்க, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்தமையால் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்த அவை முதல்வர் சீ.வி.கே.சிவஞானத்தை மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது.

இதே வேளை வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவிக்கையில்,

வடமாகாண சபையில் பதவி விலகிய அமைச்சரின் கடமைகளை முதலமைச்சர் இன்று பொறுப்பேற்பதுடன், விடுமுறை விடுக்கப்பட்ட இரு அமைச்சர்களும் மீளப்பதவிகளை ஆளுநர் முன்னிலையில் பெற்றுக்கொள்வார்கள். அதன்நிறைவாக மாகாண சபையை சுமுகமான முறையில் நடத்த முடியுமென கே.சிவாஜிலிங்கம் நேற்று தெரிவித்தார்.

வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பான சமரச பேச்சின் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.

வடமாகாண அமைச்சர்கள் தெரிவில் முதலமைச்சர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது. அவ்வாறு முடிவுகளை முதலமைச்சர் எடுக்கவும் மாட்டார். அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் தான் அமைச்சுக்குரியவர்களின் பெயரை சிபார்சு செய்வார். 4 கட்சிகளையும் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிதான மாகாண சபை ஆட்சியாக இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வழிகாட்டலின் கீழ் மாகாண நிர்வாக ஆட்சியை நடத்த ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றோம்.

எதிர்காலத்தில் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். கல்வி அமைச்சர் குருகுலராஜாவின் பதவி விலகளுக்கான கடிதம் கிடைக்கவில்லை. இருந்தும், உடனடியாக இரு அமைச்சுக்களின் பொறுப்புக்களையும் முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். தீவிர கலந்துரையாடலின் மூலம் இரு அமைச்சர்களையும் நியமிக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இன்று புதன்கிழமை (21) கட்சிதலைவர்களுடனான கூட்டம் நடைபெறவுள்ளது. அதேவேளை, விடுமுறை விடுக்கப்பட்ட இரு அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றதுடன், பதவி விலகிய ஐங்கரநேசன் அமைச்சரின் பதவியை முதலமைச்சர் தற்காலிக பொறுப்பேற்பதாக தெரிவித்திருக்கின்றார்.

அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டால், அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறும். நாளை மறுதினம் வியாழக்கிழமை மாகாண சபை கூட்டம் என்பன நடைபெற்று நிலமைகள் சுமுகமான முறையில் கொண்டு செல்லப்படுமென்றார்.