வடக்கு விவகாரத்தில் பல மாற்றங்கள் – வவுனியாவில் கைகலப்பு

சி.விக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை திரும்ப பெறப்பட்டது

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக, கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, நேற்று (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

வடமாகாண சபையைச் சேர்ந்த அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த நால்வரில் இருவரை, அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யுமாறும், இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வியாழக்கிழமை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் வடமாகாண சபையில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. எனினும், கடந்த வியாழக்கிழமை இரவே, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திடாத ஏனைய உறுப்பினர்கள், கைச்சாத்திட்டு நம்பிக்கை பிரேரணையை கையளித்தனர்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம், தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டிருந்த நிலையிலேயே, மேற்கொள்ளப்பட்ட துரித பேச்சுவார்த்தைகள் காரணமாக, அந்தப் பிரேரணை, நேற்று (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

வவுனியாவில் கைகலப்பு

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, மோதல் சம்பவம் ஒன்று நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

 

 

விடுமுறை நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன்

சாட்சிகள் சம்பந்தமாக தலையீடுகளில் ஈடுபடவோ, அவர்களைப் பயமுறுத்தவோ, சாட்சியங்களில் தலையீடு செய்யவோ அவர்கள் எத்தனிக்காதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறான உடன்படிக்ககைகளின் நிமித்தமாக விடுமுறை சார்ந்த நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

‘வழிவிட ஆராய்கிறேன்’

வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என உத்தரவாதம் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில், மேற்படி இரு அமைச்சர்களும் தொடர்ந்து தங்களின் கடமைகளை செய்வதற்கான வழிவகைகளை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.