மட்டக்களப்பில் 05கிராமிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

(படுவான் பாலகன்) கிராமிய பாலங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05பாலங்கள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. இன்னும் 25பாலங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கிராமிய பாலம் தொடர்பில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் ஒன்றுகூடல்  திங்கட்கிழமை பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு கருத்து கூறுகையில்,

போக்குவரத்து இணைப்புகளை கட்டியெழுப்புவதன் மூலம் தூர பிரதேசங்களில் பின்தங்கிய கிராமங்கள் பலவற்றில் வசிக்கும் மக்களுக்கு சந்தை, கல்வி உட்பட சுகாதார வசதிகளுக்கான அவர்களுடைய அணுகலை அதிகரிக்கும் நோக்கில் 4,000 பாலங்களை நிருமாணிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 30பாலங்கள் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 05பாலங்கள் அமைக்கப்பட்டு நிறைவுபெற்றுள்ளது. ஏனைய 25பாலங்களும் அமைக்கப்படவுள்ளன. மண்முனை தென்மேற்கு பிரதேச தேசத்தில் ஒரு பாலம் நிருமாணிக்கப்படவுள்ளது. இப்பாலம் மாவடிமுன்மாரியில் அமைக்கப்படவுள்ளது. இதே போன்று அடுத்தவருடமும் கிராமிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

நெல்வயல்களை அண்டியுள்ள வீதிகள் சில சிறிதாக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலையும் இருக்கின்றது. வீதிகளை எப்போதும் அகலமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம்தான் போக்குவரத்தினை சிரமமின்றி மேற்கொள்ள வேண்டும். மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள பாலங்களை மழைகாலத்திற்கு முன்பு அமைக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கூறிவருகின்றோம். என்றார்.