படுவான்சமரை வெற்றி கொண்டது முதலைக்குடா விநாயகர் அணி

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட படுவான் சமர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகம் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.
சனி(17), ஞாயிறு(18) ஆகிய இரு தினங்கள் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 32அணிகள் பங்குபற்றியிருந்தன.
போட்டியின் இறுதி சுற்றுக்கு முதலைக்குடா விநாயகர் அணியினரும், கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரும் தெரிவாகினர். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற குறித்த இறுதிப் போட்டியில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரை எதிர்த்தாடிய முதலைக்குடா விநாயகர் அணியினர் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோள்கள் வித்தியாசத்தில் முதலிடத்தினை பெற்றுக்கொண்டனர்.
போட்டியில் இரண்டாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரும், மூன்றாம் இடத்தினை முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற அணியினருக்கு பணப்பரிசும், வெற்றிக்கிண்ணமும், போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பதக்கமும் அணிவிக்கப்பட்டது. மூன்றாம் இடத்தினைப் பெற்ற அணியினருக்கு பணப்பரிசும், வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன், சிறந்த நன்னடத்தை அணி, அதிக கோள்கள் இட்டவர்கள், சிறந்த விளையாட்டு வீரர் போன்றோருக்கும் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.