அடிகாற்றில் தூக்கிவீசப்பட்ட பட்டதாரிகளின் கொட்டில்! சுழல்காற்றென்ன சுனாமிவந்தாலும் எமது போராட்டம் நிற்காது

காரைதீவு விபுலானந்தசதுக்கமருகே தகரக்கொட்டில் அமைத்து முகாமிட்டு
அரசதொழில்கேட்டு போராடிவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கொட்டில் கடந்த வெள்ளியன்று( 16) மாலை வீசிய பயங்கர அடிகாற்றில் சிக்குண்டு
தூக்கிவீசப்பட்டது.இதனால் கொட்டிலுக்கு பாரிய சேதமேற்பட்டது. அன்று வீசிய அடிகாற்றுடன் பொழிந்த
பெருமழையும் கொட்டிலை பெரிதும் சேதபடுத்தின.  எனினும் பட்டதாரிகள் ஒன்றுசேர்ந்து தற்காலிகமாக விரிப்பொன்றை(ரென்ற்) ஏற்படுத்தி தமது போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

சனிக்கிழமை 111வது நாள் கொட்டிலை தற்காலிகமாக அமைத்து போராட்டத்திலீடுபட்டனமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமானது நேற்று(18)
ஞாயிற்றுக்கிழமை 112வது நாளாக தொடர்ந்து இடம்பெற்றது.

புனித ரமழான் நோன்பின் 23வது நாள் நேற்றாகும்.இருந்தும் அதிகமான
நோன்பாளிகளும் காணப்பட்டனர்.

தற்காலிக கொட்டில் அமைத்து அங்கிருந்து, அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
அடிகாற்றினால் எமது இருப்பிடம் சேதமாக்கப்பட்டது ஒன்றும் எம்மைப்பாதிக்காது. அடிகாற்றென்ன சுனாமி வந்தாலும் நாம் அசையமாட்டோம். எமது இலட்சியம்
நிறைவேறும்வரை எமது போராட்டம் தொடரும். மத்திய அரசும் மாகாணஅரசும் எங்களைத் தொடர்ந்து ஏமாற்றிவருகின்றன. எத்தனைநாட்களுக்குத்தான் ஏமாற்றுவார்கள் என்பதை பார்க்கத்தான் இருக்கின்றோம்.*

இன்று வட மாகாணசபையின் நிலையைப்பாருங்கள். எம்மைத் தொடர்ந்து ஏமாற்றினால்
கிழக்கு மாகாணசபையொன்றும் பொருட்டல்ல.நாமே மாற்றத்திற்கு காரணமாக அமைவோம். எந்தவொரு தீர்க்கமான முடிவும் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பமானதே வரலாறு. அதுபோல எமது போராட்டத்தின் திருப்புமுனையும் அம்பாறை மாவட்டத்திலிருந்தே நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள். என்றனர்.