துக்க நாளான கிழக்கு பல்கலைகழக 21வது பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைகழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா அப் பல்கலைகழக நல்லையா மண்டபத்தில் நடந்தாலும் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக இன்றைய பட்டமளிப்பு விழா துக்க தினம் போல் பல்கலைகழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..

பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன் வைத்து இரவு பகலாக பல்கலைகழக நிருவாக கட்டிடத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வாயிலை முற்றுகையிட்டு 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற மாணவர்களினால் இன்றைய பட்டமளிப்பு விழாவிற்குகென இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருகின்ற பொதுமக்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கொரு சடங்கடத்தை ஏற்படுத்துவதாக மாணவர்களின் போராட்டம் அமைந்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு பல்கலைகழகத்தில் கடந்த புதன்கிழமை 7ம் திகதி ஆரம்பமான மாணவர்களின் இரவு பகலான தொடர் போராட்டம் காரணமாக அப் பல்கலைகழகத்தின் இரு பிரதான வாயிற் கதவுகள் உட்பட பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் மற்றும் ஆலங்காரம் இடப்பட்டு இருப்பதினால் துக்க தினம்போல் பல்கலைகழகம் காட்சியளிப்பதை இன்றைய தினமும் காணக்கூடியதாகவுள்ளது.

பல்கலைகழகத்திற்கு புதிதாக கடமையைப் பொறுப்பேற்றுள்ள உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் மற்றும் நிருவாகத்தின் சீரற்ற முறைகேடு மற்றும் முறையற்ற நிருவாகத்தின் செயற்பாட்டைத் தடுக்கும் முகமாக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதாவது பொய்யான முடிவு வேண்டாம், விடுதிப் பிரச்சினைக்கு ஒழுங்கான முடிவை தரவேண்டும், நியாயமற்ற வகுப்புத் தடையை உடன் நிறுத்த வேண்டும், சீசீரிவி கெமராக்களை உடனடியாக அகற்றவும், பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்து தரவேண்டும், மாஹாபொல மற்றும் மாணவர் உதவிதொகையினை சரியான காலத்தில் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

வரலாற்றில் முதல் தடவையாக பல்கலைகழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை மறுபுறம் மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதானது பட்டம் பெறுவதற்கு வருகின்ற மாணவர்களுக்கும் மட்டக்களப்பு பொது மக்களுக்கும் மனதில் சங்கடத்தை ஏற்படுத்துவாதக அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கிழக்கு பல்கலைகழகத்தில் தற்போதுள்ள உப வேந்தர் கடமையைப் பொறுப்பேற்றதில் இருந்து விடுதிப் பிரச்சினை பாரிய பிரச்சினைiயாக எழுந்ததையிட்டு நிருவாக கட்டிடத்தை முற்றுகையிட்டு நிருவாகத்தின் செயற்பாட்டை முடக்கியது மட்டுமின்றி உப வேந்தரின் கடமையையும் செய்யவிடாது இரவு பகலாக பல்கலைகழக நிருவாக கட்டிடத்தில் உணவு சமைத்து உறங்கி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பின்னர் தற்போது தொடர் போராட்டத்தில் உள்ள மாணவர்களினால் மாதம் தோறும் ஒரு பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தி வந்தபோது குறித்த ஆர்ப்பாட்டத்தின் வடிவத்தை மாற்றி இரவு பகலாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

21வது பட்டமளிப்பு விழாவானது கடந்த மாதம் நடைபெறுவதாக உப வேந்தரினால் அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட திகதியில் பட்டமளிப்பு விழா இடம்பெறுவதற்கான அனைத்து வித சோடணைகள் மற்றும் அலங்காரங்கள் என்பன இடம்பெற்றபோதும் அப் பல்கலைகழகத்தில் பதவிவகித்த வேந்தர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய வேந்தர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் வரையில் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்படுமென இறுதித் தறுவாயில் பல்கலைகழக நிருவாகம் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இரவு பகலாக பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அலங்காரங்கள் அகற்றப்பட்டிருந்தது.

இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 852 பேர் இதன்போது பட்டம் பெற்றுக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கலைகலாசார பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம், சித்த மருத்துவ கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவபீடம், விவசாயபீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களே பட்டங்களைப் பெறுகின்றனர்.

அதிகூடிய அளவாக கலை கலாசாரத்துறைகளில் கற்ற 450 பேரும், வைத்தியத்துறையில் 50 பேரும், விவசாயத்துறையில் 11 பேரும், சித்த மருத்துவத்துறையில் 10 பேரும் பட்டம் பெறுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம், விரிவுரையாளர்கள், பட்டதாரி மாணவர்கள், அவர்களது பெற்றோர், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21வது பொதுப் பட்டமளிப்பு விழா, புதிய வேந்தர் நியமனம் இடம்பெறும் வரை காலவரையறையின்றி பிற்போடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது