கொக்கட்டிச்சோலையில் உள்ள வர்த்தகர்களை இல்லாமல் செய்வதற்காகவே சதொச

(படுவான் பாலகன்)  கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள சிறு வர்த்தகர்களை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே சதொச வர்த்தக நிலையம் கொக்கட்டிச்சோலையில் திறக்கப்பட்டுள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் இன்று(17) சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மாகாணசபை உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் திறக்கப்பட்ட சதொச நிலையங்களில் பல மூடப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில், கொக்கட்டிச்சோலையில் சதொச நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வளர்ந்துவரும் வர்த்தகர்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகவே சதொச நிலையம் திறக்கப்பட்டதனை பார்க்க முடிகிறது. அதேநேரம் சகோதர இனத்தினை சேர்ந்தவர்களுக்கே இதன்மூலம் அதிகம் வேலைவாய்ப்பும் வழங்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலே சகோதர இனத்தினைச் சேர்ந்தவர்களின் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சதொச நிலையங்களை பார்க்கின்ற போது, அவை எல்லைகளிலே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள வர்த்தகர்களுக்கு பாதிப்பேற்படப்போவதில்லை. ஆனால் கொக்கட்டிச்சோலை அமைக்கப்பட்டுள்ள சதொச நிலையம் அங்குள்ள வர்த்தகர்களுக்கு பாதிப்பினையேற்படுத்தக் கூடிய இடத்திலே அமைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை கல்வியிலிருந்து வீழ்ந்தும் பொருட்டு பல செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்திலே முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மேற்கு, கல்குடா ஆகிய வலயங்களில் உள்ள ஆசிரியர்கள் பதிலீடின்றி வேறு வலயங்களுக்கு இடமாற்றப்படுகின்றனர். அதேபோன்று குறித்த வலயங்களில் இருந்து இடமாற்றப்படுவர்களை விட குறைந்த அளவானவர்களே இவ்வலயத்திற்கு வேறு வலயத்திலிருந்து இடமாற்றப்படுகின்றனர். ஆசிரியர் இடமாற்றங்களும் உரிய காலப்பகுதியில் நடைபெறவில்லை. வருடத்தின் மார்கழி மாதத்தில் நடாத்தப்பட வேண்டிய இடமாற்றம் ஜீன் மாதத்தில் நடாத்தப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான இடமாற்றங்கள் மூலமாக இன்னும் கல்வியை வீழ்ச்சிக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனரா? என எண்ணத்தோன்றுகின்றது. ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை மார்கழி மாதத்தில் நடாத்துவதற்கான செயற்பாடுகளை கல்வி அமைச்சும், கல்வி உயர் அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும். கடந்த காலங்களிலே தமிழ்த் தினப்போட்டியில் கூத்துப்போட்டி இருந்த நிலையில் அப் போட்டி இல்லாமல் செய்யப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழர்களின் கல்வியை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும் செயலாகவே பார்க்கின்றேன். ஒரு மாணவனை இழந்தால் கூட தமிழ்சந்ததியொன்று இல்லாமல் போகின்றது. ஏன்னெனில் கடந்த கால யுத்தத்தினால் எமது இன மக்கள் பலர் இறந்துவிட்டனர். இதனால் தமிழினம் அருகி செல்லும் இனமாக இருக்கின்றது. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதி அதிகம் தமிழர்களை கொண்ட பகுதியாகவிருந்தும், இன்று ஒரு நாடாளுமன்ற அங்கத்தவர்களை கொண்டிராத தொகுதியாக இருக்கின்றமையும் வேதனைதரும் விடயமாகவே இருக்கின்றது. என்றார்.