மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், கட்டடத்திறப்பு நிகழ்வும் இன்று(17) சனிக்கிழமை நடைபெற்றது.
இதன் போது, பாடசாலையில் புதிதாக கட்டப்பட்ட இருமாடிக்கட்டத்தினை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் நாடாவெட்டி திறந்து வைத்தார். மேலும் மாணவர்களின் சித்திரக்கூடக்கண்காட்சியை கிழக்கு மாகாண பிரதிதவிசாளரும், மாகாணசபை உறுப்பினருமாகிய பிரசன்னா இந்திரகுமார், தரம் 4 மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளினூடான கற்றல், கற்பித்தலுக்கான வகுப்பறையினை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதன்போது மகிழமுதம் சஞ்சிகையும், கலந்துகொண்டிருந்த அதிதிகளுக்கு வழங்கப்பட்டதுடன், நவீன மற்றும் ஆளுமைவிருத்திகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் தரம் 4மாணவர்களுக்காக இப்பாடசாலையில் விசேடமாக முன்னெடுக்கப்படும் கற்றல், கற்பித்தலினை ஆவணமாக்கிய, ஆவணப்படமொன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.
மேலும், பாடசாலைக்கு தொடர்ச்சியாக வருகைதந்த மாணவர்கள், வகுப்பு ரீதியாக சிறந்தபெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் ஆகியோருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.