அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உதவுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பாதிக்கப்பட்ட சம்பூர் மக்கள் கோரிக்கை

திருகோணமலையில் அண்மையில் மீழ்குடியேற்றப்பட்ட சம்பூர் மக்கள் எதிர் கொள்ளும்   அடிப்படை பிரச்சனைகளை  தீர்க்க உதவுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பாதிக்கப்பட்ட சம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

குறிப்பாக மக்களின் முக்கியமான தீர்க்கப்படாத காணிப்பிரச்சனைகள் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக ஆணைக்குழு உயரதிகாரிகளிடம் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பிலிருந்து  வருகை  தந்த ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்  தலமையிலான குழுவினர்  வியாழன் காலை  10.00 மணி தொடக்கம் 12.45 மணி வரை திருகோணமலை  மாவட்ட கச்சேரியில்    சிவில் அமைப்புக்களுடனும் அரச உயர் மட்டத்தினருடனும்   கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதன் பின்னர் வெள்ளியன்று மீழ்குடியேற்றக்கிராமமான சம்பூருக்கு விஜயம் செய்தனர். இதில் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளும் பங்குகொண்டிருந்தனர்.

இதன்போதே சம்பூர் மக்கள் தமது பிரச்சனைகளை முன்வைத்தனர்.இதன்பின்னர் மக்களால் முன்வைத்த காணிப்பிணக்கு சார்ந்த கடற்படையினரின் கீழ் வரும் காணிகள் உள்ளிட்ட பல இடங்களையும் பார்வையிட்டனர்.

சம்பூர்- நீனாக்கேணி பகுதியில் “ விதுர கடற்படை முகாம் அமைக்க கோராப்பட்ட காணியை விட அதிகமான காணிகளை கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளதாகவும் அவை விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆதாரங்களுடன் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினர்.

2006ம் ஆண்டு  மக்கள்  இடம் பெயர்ந்த நிலையில்  மக்களுக்குச் சொந்தமான 176 ஏக்கர்  காணிகளில் இலங்கை  கடற்படை முகாமிட்டு இருந்தனர். இவ்வாறு முகாமிட்டிருந்த காணிகள் மக்களின்  காணிகள் என்ற   காரணத்தினால் மக்களை குடியேற்றுவதற்காக மாற்றுக்காணியை கடற்படை கோரியிருந்தது.

கிராமத்தினைச் சேர்ந்த  மக்கள் தாங்கள் ஊருக்கு போக வேண்டும் என்பதற்காக 12 குடும்பங்களும் தங்களுக்கு  சொந்தமான சம்பூர் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட  சாக்கரவட்டவன் வயல் வெளிக்கும்  பனிக்கட்டியன் குளத்திற்குளம் இடைப்பட்ட பகுதியில்15 ஏக்கர்  வயல் காணிகளை, மாற்றுக் காணிகள் வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனையில் கடிதங்களை பிரதேச செயலாளருக்கு வழங்கி இருந்தனர்.

இதன் பிற்பாடு  மேற்படி 12 குடும்பங்களுக்கும் சொந்தமான காணியுடன் 1990 ஆண்டிற்கு முன்பு  சாக்கர வட்டவன், வெங்காயச்சேனை, நீனாக்கேணி, ஏமவட்டவன் எனும் பகுதிகளில்  வாழ்ந்த83  குடும்பங்களின்   சொந்தமான காணிகளையும், அதனோடு இணைந்த வயல் காணிகளுடன்,   மொத்தம்  340 ஏக்கர் காணி  உட்பட, எமது சம்பூர் மக்கள் மீனவத் தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் 1000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை இலங்கைக் கடற்படையின்  “விதுர கடற்படை முகாமுக்காக எடுக்கப்பட்டுள்ளன.

இதனால் நாங்கள் பல  பிரச்சினைகளை எதிர் நோக்கிறோம் எனவும் இங்கு சுட்டிக்காட்டினர்.

83 குடும்பங்கள்  வாழ்ந்த பகுதிக்குரிய  167 ஏக்கர் காணிகளை கடற்படை சுபீகரித்துள்ளதால் எமது பிள்ளைகளுக்கு காணியினை வழங்க முடியாமல் உள்ளோம்.

03 குளங்களிலுமுள்ள வயல்காணிகள் கடற்படையினர் வசம் உள்ளதால் எமது ஜீவனோபாயத்தினை மேற்கொள்ள முடியாமல் வறுமையாக வாழுகிறோம்.

அதுபோன்று சிறிமா பண்டாரநாயக்கா அவர்களினால் இளைஞர்களை  சுயதொழிலில்  ஊக்குவிப்பதற்காக  50 இளைஞர்களுக்கு வெங்காயச் செய்கைக்காக காணியும், வெங்காயமும் வழங்கப்பட்டு  பயிர் மேற்கொண்டு வந்த வெங்காயத் தோட்டம் என்ற பகுதியும் கடற்படையினர் வசம் உள்ளதால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப் பகுதி மீனவர்கள்   காலம்  காலமாக  நெய் மலை, மத்தாளமலை, தோணிக்கல் மற்றும் மொட்டமலைப் கடற்பகுதியில்  கடற்தொழில் மேற்கொண்டு வந்தனர்.

இப்பகுதியில் கடற்கரை ஓரமாக இலங்கை  கடற்படையினர் வேலி இட்டுள்ளதால் மீனவர்கள்  3 கிலோ மீற்றர் சுற்றிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் உட்கொண்டு போக முடியாதுள்ளது.மீனவர்கள் இளைப்பாறுவதற்கான இடம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என பலபிரச்சனைகளையும் சுட்டிக்காட்டினர்.