தமிழ் – முஸ்லிம் நல்லுறவு ஏற்றம் காண வழி என்ன?

தமிழ் – முஸ்லிம் உறவு இன்று சீர்குலைந்த நிலையில் காணப்படுகிறது. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் சந்தேகக் கண் கொண்டும் பகை உணர்வுடனும் நோக்குகின்ற ஒரு துரதிஷ்டமான நிலை இன்று காணப்படுவது வேதனைக்குரியதாகும்..

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடையே பாரியதொரு இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு இரண்டு காரணங்களை நாம் முன்வைக்க முடியும். ஒன்று அரசியல் ரீதியான செயற்பாடுகள் மற்றொன்று தமிழ் சமூகத்திலிருந்து ஆயுதம் ஏந்திய குழுக்களின் இயங்கியலுமாகும்..

தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து அரசியல் செய்த ஒரு காலம் இருந்தது. அது ஒரு நல்லுறவையும் பரஸ்பர நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. ஆரம்ப காலங்களில் தமிழ் கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை. இந்நிலை முஸ்லிம்கள் தமிழ் வேட்பாளர்களுக்கும் தமிழர்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்களித்துக்கொள்கின்ற ஒரு நிலை பேணப்பட்டுவந்ததை வரலாற்றில் நாம் காண முடியும்.

தமிழ் கட்சிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள் பின்னர் கட்சி மாறியதும் தமிழ் கட்சிகளில் அங்கத்துவம் வகித்த நிலையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. இதற்கு பரஸ்பரம் தமிழ் தரப்பில் இருந்து முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் தரப்பிலிருந்து தமிழர்கள் மீதும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தத்தமது நிலைப்பாட்டுக்கு ஆதரவான நியாயங்களை கூறிவந்திருக்கின்றனர்.

தமிழ்த் தரப்பில் இருந்து கட்டமைக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் முஸ்லிம் மக்கள் மீது எப்போதும் வெறுப்புணர்வையும் சந்தேகப்பார்வையையுமே கொண்டிருந்திருப்பதைப் பார்க்கின்றோம். சில தமிழ் ஆயுதக் குழுக்களோடு முஸ்லிம்களும் இணைந்து செயலாற்றிய பக்கங்களும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இத்தனைக்கும் மத்தியில் ஆயுதக் குழுக்களோடு இணைந்து செயற்பட்ட முஸ்லிம்களை பிரித்து நோக்கி அல்லது வேறுபடுத்திப் பார்த்து அவர்களைத் தண்டித்த சந்தர்ப்பங்களும் ஏராளம் உண்டு. இவ்வாறான போக்குகள் தமிழ் சமூகத்தில் இருந்த சிறியதொரு குழுவினரால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

எனவே இவ்வாறான தடயங்களை வைத்து தமிழ் – முஸ்லிம் உறவு எதிர்காலங்களிலும் கசப்புக்குரிய ஒன்றாக அமைவதென்பது ஒரு ஆரோக்கியமான நிலைக்கு புறம்பானதாகும். ஏனெனில் இவ்விரு சமூகங்களினதும் ஒன்றித்த தேவைப்பாடுகள் அதிகம் இருப்பதை குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதன் அவசியத் தன்மை உணரப்பட்ட ஒன்றாகும்.

முஸ்லிம் தரப்பிலிருந்து தமிழர்களோடு சினேகபூர்வமான அரசியல் ஈடுபாட்டையோ மற்றும் ஒன்றித்த போராட்டங்களையோ முன்னெடுக்க முடியாத கோணத்தை அதிகம் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். இது சிறு தமிழ் ஆயுதக் குழுக்களின் முஸ்லிம் மக்களின் மீதான அத்துமீறல்களின் விளைவுகளை வைத்து இன்று பேசப்படுகின்ற ஒன்றாகவும் மாறி இருக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் முஸ்லிம் மக்கள் மீதான விரோதப் போக்குகளை முன்னெடுக்காத நிலையில் சிறிய ஆயுதக் குழுக்கள் இவ்வாறு ஈடுபட்டதை முழு தமிழ்ச் சமூகத்தின் மீதும் சுமத்தி அவர்களை நம்ப முடியாது என்று முஸ்லிம் தரப்பில் பேசப்படுவது முறையல்ல என்ற அபிப்பிராயமும் இதில் இருந்து வருகின்றது. உண்மையில் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை அந்த ஒட்டுமொத்த சமூகமே செய்ததாக கருதுவதும் பேசுவதும் முறையற்ற அணுகுமுறை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

தமிழ் மக்களும் அவர்களில் இருந்து உருவான ஆயுதக் குழுக்களின் செயற்பாட்டை கண்டித்தும் எதிர்த்தும் தங்களால் பேச முடியாத ஓர் அச்ச சூழலுக்குள் அவர்கள் இருந்திருப்பர் என்பதும் நாம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும். என்றாலும் தமிழ் ஆயுதக் குழுக்களை எதிர்த்துப் பேசாது தமிழ் மக்களினால் அன்று காக்கப்பட்ட மௌனம் சரியென்று ஏற்றுக்கொண்டாலும் இன்று அந்த நிலை இருப்பதாகக் கொள்ள முடியாது.

மிதவாத அடிப்படையில் தோன்றிய தமிழ் அரசியல் கட்சிகளும் அன்று இருந்த ஆயுதம் தரித்த குழுக்களின் ஆதிக்கத்தை மீறி அடியெடுத்துவைக்க முடியாத நிலையில் இருந்தனர் என்பதும் மறுக்கமுடியாததுதான். ஆனால் ஆயுத காலாசாரம் என்பது கடந்த 2009 மே பத்தொன்பதுடன் முடிவுக்கு வந்ததாகும். அப்படி இருந்தும் இதற்குப் பின்னராக காலங்களிலும் எவ்வாறு தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம் மக்கள் மீது தமது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்யும் வகையில் முன்னெடுப்புக்களை மேற்கொண்டார்களோ அதனை ஒட்டியே இன்றைய மிதவாத தமிழ் அரசியல் கட்சிகள் செயல்படமுடியாது. என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக அந்த ஆயுதக் குழுக்களின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாக காணப்படுகின்றனர்.

இதனால்தான் மிதவாத தமிழ் அரசியல் கட்சிகளை நம்பமுடியாத ஒரு நிலைக்கு முஸ்லிம் மக்களை இன்று தள்ளுகின்றது. இதன் மறுதலையே அவர்களோடு இணைந்து அரசியல் செய்வதிலும் ஒன்றித்த போராட்டங்களில் ஈடுபட முடியாத நிலையிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்களின் இருப்பியலும் அரசியல் சூழ்நிலைகளும் தமிழ் மக்களின் நிலையிலிருந்து பல தளங்களில் வேறுபட்டுக்காணப்படுகின்றது என்ற யதார்த்தம் மிகத் தெளிவானது. இந்த வரலாற்றுக் காரணி தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துப் போராட்டங்களிலும் முஸ்லிம் மக்கள் பங்களிப்பை நல்கமுடியாத ஒரு இக்கட்டான நிலை இருப்பதையும் கவனத்தில் கொண்டு, முஸ்லிம் மக்கள் மீதான தமிழ் மக்களின் பார்வை அமைவதென்பது முக்கியமான ஒன்றாகும். இந்த புரிந்துணர்வில் ஏற்படுகின்ற இடரல்களும் சேர்ந்து முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்தில் நோக்கச் செய்கின்ற ஒரு நிலைதான் உருவாக்கப்படுவதைக் காண்கின்றோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும் அதேபோன்று தமிழர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அண்மைக்காலமாக நெருங்கிய உறவுகளும் சிநேகபூர்வமான தொடர்புகளும் இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த சுமூக உறவு நிலையில். இருந்து தமிழ், முஸ்லிம் உறவுகள் மிக உறுதியாக கட்டியெழுப்பப்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. அதனை முன்னெடுப்பதற்கு இரண்டு சமூகங்களில் இருந்தும் சில புரிந்துணர்வுகளும் விட்டுக்கொடுப்புக்களும் அவசியப்படுகின்றது.

முஸ்லிம் மக்களின் அரசியல் சூழலில் காணப்படுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக முன்வைக்கப்படுகின்ற விடயங்களில் அவர்களுக்கான நியாயத்தை ஏற்றுக்கொண்டு தமிழர் அரசியல் நிலைப்பாடுகளும் தீர்வுகளும் முன்மொழியப்படுவதுதான் நிரந்தர நேச உறவுக்கு வழிவகுக்கும். முஸ்லிம்களால் முன்வைக்கப்படுகின்ற கரையோர மாவட்டக் கோரிக்கை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒரு தீர்வு போன்றும் அது தமிழ் மக்களுக்கு எதிரான விடயம் போன்றும் சித்தரிக்கப்படுகின்ற பிழையான நோக்குதல்கள் போன்ற செயற்பாடுகள் தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைத்துவருகின்றது.

உண்மையில் கரையோர மாவட்ட கோரிக்கை என்பது தமிழ் பேசும் மக்களின் நலனில் இருந்து முன்வைக்கப்படுவது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துகின்ற கடப்பாட்டை உணர்ந்து செயற்படவேண்டும்.

முஸ்லிம் அமைச்சர்கள் தமது அபிவிருத்திப் பணிகளில் தமிழ்ப் பிரதேசங்களை புறக்கணித்து வருகின்றனர் என்ற ஒரு வெகுவான குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது. தமிழ் எம்.பிக்கள் எவ்வாறு தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினைக் கொண்டு தமது பிரதேச அபிவிருத்திகளுக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்கும் தமது நிதிகளை பிரயோகிக்கின்றார்களோ அதே போன்றே முஸ்லிம் எம்,பிக்களும் தமது நாடாளுமன்ற உறுப்புரிமைக்கான நிதிகளை பிரயோகித்துவருகின்றனர்.

ஆனால் ஒரு அமைச்சர் என்று வருகின்ற போது அவர் எந்த சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் முழு நாட்டுக்கும் பணியாற்ற வேண்டிய பொறுப்பை உடையவராவார். அந்த வகையில் முஸ்லிம் அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கும் தமிழ் பிரதேசங்களுக்கும் தமது அமைச்சு நிதிகளை சரியாக ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதாகவே தெரிகிறது. இந்த நிலையில் மாற்றம் வேண்டி நிற்பதை ஏற்கத்தான் வேண்டும்.

ஆகவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு வாழவேண்டிய சந்தர்ப்பத்தை எதற்காகவும் நிராகரிக்காது இரண்டு சமூகங்களும் பரஸ்பரம் இரு தரப்பு நியாயங்களையும் புரிந்து கொண்டு விட்டுக்கொடுப்புடன் செயற்படுகின்ற ஆரோக்கியமான நிலைதான் தமிழ் – முஸ்லிம் உறவை நிலைப்பேறாக்கும்.

M.M.M. NoorulHagu 129B, Osman Road, Sainthamaruthu – 05 0772612094