பழுகாமத்தில் குப்பை கொட்டும் பிரதேசம் சீர்செய்யப்பட்டது

(பழுகாமம் நிருபர்) போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பழுகாமத்தில் பிரதேச சபை குப்பைகளை கொட்டுவால் மக்கள் பல அசௌரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவித்தமையை தொடர்ந்து பிரதேச சபையினால் குப்பை கொட்டும் இடம் சீர்செய்யப்பட்டுள்ளது.
வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமான பழுகாமத்தில் பிரதேச சபையானது வெல்லாவெளி, கோயிற்போரதீவு, முனைத்தீவு, பெரியபோரதீவு, பழுகாமம் ஆகிய இடங்ளில் சேருகின்ற குப்பைகளை பழுகாமத்தில் கொட்டுவதால் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இக் குப்பைகளை இங்கு கொட்டுவதன் மூலம் கூட்டுப்பசளை தயாரிப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைத்தே இங்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இந்த தொழிற்சாலையினால் கூட்டுப்பசளை தயாரித்து அதனை விற்பனை செய்வதும், அதற்காக குப்பை கொட்டும் பிரதேசமாக பழுகாமத்தை மையப்படுத்தியதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான கட்டடம் கட்டப்பட்டு அதற்குரிய இயந்திரங்கள் பொருத்தப்படாத நிலையில் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

 

ஆனால் அந்த தொழிற்சாலை தற்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன் குப்பைகள் ஒழுங்கான முறையில் கொட்டப்படாமையினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர் மக்களும் விவசாயிகளும். அருகே வயல் நிலமும், நூறு மீற்றர் தொலைவில் கிராம மக்கள் வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பிரதேச சபை செயலாளர் ஏ.ஆதித்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் பிரகாரம் குப்பை கொட்டும் பகுதி சூழலுக்கு சிறந்த முறையில் நிவர்த்தி செய்யப்படடுள்ளது. எதிர்வரும் காலங்களில் விவேகானந்தபுர பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் எனவும், குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டமும் அமுல்படுத்தப்படும் எனவும் பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.