மற்றவர்களை பிழையாக காட்டி வெற்றிபெற எந்த கொம்பன் நினைத்தாலும் அது வம்பில்தான் முடியும்.

(படுவான் பாலகன்)  மற்றவர்களுக்கு சேறுபூசி. கரி பூசி, எங்களை பிழையாக காட்டி வெற்றிபெற வேண்டுமென எந்த கொம்பன் நினைத்தாலும் அது வம்பில்தான் முடியும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குறிப்பிட்டார்.

அரடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நேற்று(15) வியாழக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் அரசியலில் ஈடுபட்டு தோல்வியுற்றவர்கள். எனக்கு சேறு பூசி விட்டு சென்றுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திலே ஊர்களை இரண்டாகப்பிரித்து கூத்தாடிகள் கொண்டாட்டம் வைப்பது போன்றதான நிகழ்ச்சிகளை நடாத்துகின்றனர். அவர்களை அழைத்துவரும் கூத்தாடிகளும் மட்டக்களப்பில் இருக்கின்றனர்.

நான் தோற்றுவிட்டேன் என்றால் தோற்றத்திற்கான காரணத்தினை கண்டறிய வேண்டும். கண்டறிந்த தோல்விக்கான காரணத்தினை நீக்கிவிட்டு வெற்றிக்கான உத்திகளை கையாள வேண்டும். அதனைவிடுத்து எனது மட்டத்திற்கு மற்றவர்களை இறக்குவதற்காக சேறுபூசுகின்ற மோசமான கலாசாரத்தினை பின்பற்றுபவர்கள், ஒருநாளும் வெற்றி பெறமாட்டார்கள். அதேவேளை மற்றவர்களுக்கு சேறுபூசி. கரி பூசி, எங்களை பிழையாக காட்டி வெற்றிபெற வேண்டுமென எந்த கொம்பன் நினைத்தாலும் அது வம்பில்தான் முடியும்.

பதுளை வீதிக்கு நான் செல்லவில்லை என்று கூறுகின்றனர். அது வெறும் வடிகட்டிய பொய். அங்குள்ள பாடசாலைகளுக்கு சென்றிருக்கின்றேன். உதவிகளையும் வழங்கியிருக்கின்றேன். அங்குள்ள கிராமத்திற்கும் எத்தனையோ தடவை சென்றிருக்கின்றோம். இவை முழுவதும் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் சொல்லிக்கொடுப்பார். கிளிப்பிள்ளைகள் சொன்னதை சொல்லும். சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஒருவர் எங்கள் மீது சேறு பூசுகின்றார். ஏனென்றால் அவரின் விலைக்கு நாங்கள் ஆளாக போகின்றவர்கள் அல்ல. விலைபோகக் கூடியவர்கள்தான் அவர்களை வாங்கலாம். நாங்கள் விலைபோக முடியாதவர்கள். வடிகட்டிய சுத்தமான பொய்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் கொள்வனவு செய்வதாகவிருந்தால் அந்த நிகழ்ச்சிக்கு சென்றால் கொள்வனவு செய்ய முடியும். என்றார்.