கிழக்கு மாகாணத்தில் 1712பேரை ஆசிரியர்களாக இணைப்பதற்கு அனுமதி

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் 1712ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய நிதிக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை(15) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைக் குறிப்பிட்டார்.

மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பெறப்பட்ட அனுமதியினைக் கொண்டு, 500க்கு மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களும், 1200 அளவிலான பட்டதாரிகளும் நியமனம் செய்யப்படுவர். இதைத்தவிர 812பேரை ஆசிரியர்களாக இணைப்பதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆசிரியர் வெற்றிடங்கள் பெரும்பாலனவற்றினை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினைச் சேர்ந்த ஆசிரியர்கள் பதில் கடமையின்றி கடந்த மாதமளவில் வேறு வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர். அதேவேளை மட்டக்களப்பு மேற்கிலிருந்து இடமாற்றம் பெற்று செல்பவர்களை விட குறைவானர்கள் வெளி வலயங்களிலிருந்து இங்கு இடமாற்றப்படுகின்றனர். ஆனாலும் இங்குள்ள ஆசிரியர்கள் அர்ப்பணிப்பான சேவைகளை செய்துகொண்டிருக்கின்றனர். இதனால்தான் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இருந்து கொண்டிருக்கின்றது. நகர்ப்புறங்களிலே உள்ள சில பாடசாலைகள் ஆசிரியர்களை களஞ்சியப்படுத்தும் இடங்களாவும் இருக்கின்றன.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினைப்பொறுத்தவரை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தினை முழுமையாக கொண்ட வலயமாக இருந்து கொண்டிருக்கின்றது. இதனைக் கட்டியெழுப்ப அயராது உழைத்துக்கொண்டிருக்கின்ற அதிபர், ஆசிரியர்கள், அதிகாரிகள் இந்த வலயம் பின்னோக்கி இருப்பதற்கான காரணத்தினை கண்டறிவதோடு, கடந்த காலத்தில் நாம்விட்ட தவறினையும் திருத்திக்கொள்ள வேண்டும். பெரும்பான்மை சமூகத்தினைச் சேர்ந்த மாணவர்களிடத்திலே எல்லோரையும் காலில் விழுந்து மரியாதை செய்கின்ற பண்பு மேலோங்கி இருக்கின்றது. அது எமது மாணவர்களிடத்திலே மிகமிக குறைவாகவே இருக்கின்றன. இதனை மாற்றியமைக்க வேண்டும். மற்றவர்களை கண்ணியமாக்கும் வரை, அன்பு செலுத்தும்வரை, மற்றவர்களை கௌரவிக்கும் வரையும், மற்றவர்களின் மனிதநேயத்தினை ஏற்றுக்கொள்ளும் வரையும் துஸ்பிரயோகங்கள் எங்கும் நடைபெறும். இதற்காக நாம் அனைவரிடத்திலும் அன்பு, மனிதநேயம், கண்ணியம் போன்றவற்றினை வளர்க்க வேண்டும். என்றார்.