தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு மாத்திரம்தான்

(படுவான் பாலகன்) தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை. காலத்தினை கடத்திக்கொண்டு மட்டுமே இருக்கின்றனர் என சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் துன்பங்களை, துயரங்களை சந்தித்தவேளை பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் குரல் கொடுத்தவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே என்பதனை இவ்வாறான விமர்சகர்களுக்கு கூறிக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை(15) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைக் குறிப்பிட்டார்.

கிறீஸ் மனிதன், கறுப்பு, வெள்ளை வேன், முள்ளிவாய்க்காலில் மக்களை கொன்றவேளை, காணி அபகரிப்பு, தமிழ் மக்கள் கைது என பல விடயங்களுக்கு துணிந்து நின்று குரல்கொடுத்தவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாத்திரமே, முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானோ, பிரதி அமைச்சர் கருணா அம்மானோ, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவோ குரல் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தவேளை பாடசாலைக்கட்டிடம் மற்றும் பொது விடயங்களுக்கும் பல உதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளேன். என்றார்.