மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 609ஆசிரியர்கள் பற்றாக்குறை

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் 609ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். என மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை(15) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைக் குறிப்பிட்டார்.
பிரதிக்கல்விப் பணிப்பாளர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகம் இருந்துகொண்டிருக்கின்றது. ஆனாலும் முடிந்தவரை எல்லோரது பங்களிப்புடனும் வலயத்தினை வழிநடத்திச் செல்லுகின்றோம். வருடத்தின் நடுப்பகுதியில் குறிப்பாக ஆறாம் மாதத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதினால் கற்பித்தலில் இடர்பாடு ஏற்படுகின்றது. குறிப்பாக தரம் 5இற்கு கல்வி கற்பிக்கின்ற, தரம் 11ற்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். கடந்த வருடமும் இவ்வாறான இடமாற்றம் இடம்பெற்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


கடந்த வருடம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 69ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டனர். ஆனால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு 22ஆசிரியர்களே வெளி வலயங்களில் இருந்து வந்தனர். அதே போன்றுதான் இவ்வருடமும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினைச் சேர்ந்த 39ஆசிரியர்களுக்கு இடமாற்றக்கடிதங்கள் அனுப்பபட்டுள்ளன. வேறு வலயங்களைச் சேர்ந்த 22ஆசிரியர்கள் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் எத்தனைபேர் இவ்வலயத்திற்கு வருகைதருவர் என்பதிலும் சந்தேகம் இருக்கின்றது. மட்டக்களப்பு மேற்கு வலயத்திலே 2016ஆண்டு தரவுகளின் அடிப்படையில் 609 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால்தான் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இறுதிக்கல்வி வலயமாக இருந்து கொண்டிருக்கின்றது. என்றார்.