மூதுார் இரால்குழி மக்கள்ஆர்பாட்டம் மண்ணகழ்வை நிறுத்துக

திருகோணமலை மூதூர் இரால்குழிகிராமத்தில் கங்கையில் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பைதடுப்பதுடன் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மண்ணகழ்வை தடுத்து  நிறுத்தி இக்கிராமத்தின் அழிவை நிறுத்துமாறுகோரி இன்று  காலை 9.30.மணியளவில் கிராமத்தைச்சார்ந்த மக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்பாட்டமொன்றை நடாத்தியதுடன் பின்னர் நடந்த நிகழ்வில் கங்கையருக்கில்  கண்ணாமரம் மற்றும் மண்சாக்கு அடுக்கும் நிகழ்வையும் மேற்கொண்டனர்.

சர்வதேச சூழல் தினத்தைமுன்னிட்டு இரால்குழி  சூழல் அபிவிருத்தி க்குளு ,மற்றும் இளைஞர்களகமும்; ,மாவட்ட சிவில்  மற்றும் அரசியல் உரிமைக்கான அமைப்பும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் கிழக்குமாகாண சபை உறுப்பினர்.கு.நாகேஸ்வரன்,ஜே.ஜனார்த்தனன், மற்றும் சூழல்சுற்றாடல் மற்றும் கரையோர பாதுகாப்பு மாவட்ட அதிகாரி  திருமதி.ஊர்மிலா  உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். இங்கு வருகைதந்திருந்த அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கும் ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டன. அந்த மகஜரில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

 

உலக சூழல் தினத்தை முன்னிட்டு கிழக்குமாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள  இறால்குழி   கிராம விவசாயிகள், பெண்கள், பாடசாலை மாணவர்கள்  அடங்கலாக பல்வேறு   வகையில்  பாதிப்பிற்குள்ளாக்கப்படும்  நாங்கள்  15 யூன் 2017 ஆகிய இன்றைய தினம் திருகோணமலை மூதூர் இறால்குழியில்   ஒன்றுகூடி எமது ஏகோபித்த கோரிக்கையை தங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச  செயலாளர்  பிரிவில் உள்ள  இறால்குழி கிராமமானது  கடந்த 1933 ம் ஆண்டிலிருந்து   இன்றுவரையும்   தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் கிராமாகும்.இக்கிராம மக்களின்  பிரதானமான  ஜீவனோபாயத் தொழில்களாக  விவசாயம் மற்றும் கடற் தொழிலும் அமைகின்றது.

அந்த வகையில் எமது மக்கள் பரம்பரை பரம்பரையாக  இறால்குழி  கிராம சேவக எல்லைக்குள்ள பரவிப்பாஞ்சான்,பன்வெட்டுவான்,தோணித்துறைமடு,மணலோடை, முள்ளிமடு, கிவிளையடி, நுளம்பான்தீவு, சாணாமடு  ஆகிய இடங்களில் உள்ள விவசாயக் காணிகளில்  நெற்செய்கையினையும், தோட்டப் பயிர் செய்கையினையும் மேற்கொண்டு வந்தனர். ( எமது மக்களுக்கு 1984ம் ஆண்டு அரசால் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டது)

மேற்படி  இடங்களில்  நாம் எமக்கான ஐ{வனோபாயத் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு  வந்த வேளையில் இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில்  நடந்த  யுத்த  அனர்த்தத்தினால் கடந்த 1985,86,87,1990, 97   ஆண்டுகள்   மற்றும் இறுதியாக 2006ம் ஆண்டு என  06  தடவைகள்   எமது இறால்குழி கிராமத்தினை விட்டு இடம்பெயர்ந்து  முதல்  03 வருடங்களில்(1985,86,87)  மேலே கூறபப்ட்ட விவசாயப் பகுதிகளிலுள்ள   தோட்டப் பகுதிகளிலும் அதனை அண்டிய காட்டுப் பகுதிகளிலும் மிகவும் துன்பகரமான வாழ்வு வாழ்ந்தோம்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற  அனர்த்தத்தினால்  1990, 97 இடம்பெயர்ந்து மூதூர் பச்சைனூர் அகதி முகாம்களில் 08 வருடங்கள் அகதி வாழ்க்கை  வாழ்ந்தோம்.

இவ்வாறு  இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த எமது கிராம மக்கள் 1997ம் ஆண்டின் இறுதிபகுதிகளில் எமது கிராமத்திற்கு மீளக்குடியேற்றப்பட்டு2006ம்  ஆண்டு  வரைக்கும் எமது இறால்குழி கிராமத்தில் குடியிருந்து எமது தொழில்களை வழமை போல மேற்படி பகுதிகளில் மேற்கொண்டு எமது கிராம மக்கள் இயல்பு  வாழ்க்கை  வாழ்ந்து  வந்தனர்.

இறுதியாக   2006ம்  ஆண்டு  இடம்பெற்ற யுத்தமும்  எமது  கிராம  மக்களை  விட்டு வைக்கவில்லை. மீண்டும்  இடம்பெயர்ந்து  கிண்ணியா ஆலங்கேணி மற்றும் ஈச்சந்தீவு கிராமங்களில்  02 வருடங்கள் தஞ்சம் புகுந்திருந்தோம்.

இவ்வாறு 1985 தொடக்கம் 2006ம் ஆண்டு வரைக்கும் 06 தடவைகள் இடம்பெயர்ந்த எமது கிராமமானது சமூகக்கட்டமைப்புக்களையும், கிராமிய உட்கட்டுமானங்களையும் முழுமையாக இழந்திருந்தது.

இவ்வாறு பல  தடவைகள் இடம்பெயர்ந்த எமது கிராம மக்கள்  2008ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் மீளவும்  எமது இறால்குழிக்  கிராமத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டனர். நாம் குடியேற்றப்பட்டதும் மீளவும்  எமது பாரம்பரிய தொழில்களை   மேற்படி எமது தொழில் இடங்களில் மேற்கொண்டு ஜீவனோபாயத்தினை  நடாத்தி வந்திருந்தோம்.

இந்த காலப்பகுதிகளில் எமது இறால்குழிக் குடியிருப்புக் காணிகளையும் நாம்  தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மகாவலி கங்கையின்  நீர் கடலுக்கு சென்றடையும் நன்னீர் ஆற்றின் இரு மருங்களிலுமுள்ள பரவிப்பாஞ்சான்,பன்வெட்டுவான்,தோணித்துறைமடு, மணலோடை, முள்ளிமடு, கிவிளையடி, நுளம்பான்தீவு, சாணாமடுஆகிய பகுதிகளையும் பிரித்துக் கொண்டு செல்லும்  வகையில்  திருமலை மட்டக்களப்பு  வீதியானது  அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது.

இவ்வாறு வீதி அமைக்கப்பட்டதனால் எமது இறால்குழிக்  கிராம மானது வீதியின் வடக்குப் பக்கமாகவும் தொழில் இடங்கள் வீதியின் தெற்குப் பக்கமாகவும் பிரிபட்டுச் சென்றதினால்  எமது மக்களின் ஜீவனோபாயத்தினைப் பாதிக்கும்  வகையிலான 02 முக்கிய விடயங்கள் நடந்தேறின:

1.   2011ம் ஆண்டு காலப்பகுதிகளில்  வழமை போல் நாம்  மேலே குறிப்பிட்ட விவசாயம் மற்றும் தோட்டம் செய்யும் பகுதிகளில் வழமையான தொழில்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு  வருகின்ற வேளையில் இலங்கை வன இலாகா திணைக்களத்தில் கடமை புரியும் அதிகாரிகள் சிலர் அவ்விடங்களுக்கு வருகை தந்து இப்பகுதிகள் எமது திணைக்களத்திற்குச் சொந்தமானது ஆகையால் இப்பிரதேசங்களில் தொழில் செய்ய வேண்டாம் என தடுத்தனர்.

இதனால் எமது மக்கள் முழுமையாக தங்களது ஜீவனோபாயத் தொழிலினை மேற்கொள்ள முடியாத  வகையில் வறுமையுடன்   வாழ்ந்து வருகின்றனர்.

2.   அடுத்து நாம் மகாவலி கங்கை நீரில் இருந்து நீர் பெற்று  விவசாய  நடவடிக்கைகள் மேற்கொள்ளும் கங்கைகயில்  அனுமதி பெற்றும்  சட்ட அனுமதி இன்றியும் மண் அகழ்வும் இடம்பெற்றது. இதனால் இப்பகுதி ஆறானது ஆழமாக்கப்பட்டதுடன், கடல் நீரானது நன்னீருடன் கலந்து உவர் தன்மை ஆனதால் ஆற்று நீரை நம்பி விவசாயம் மேற்கொண்ட மக்கள் பாதிகக்ப்பட்டனர்.

அதுமட்டுமன்றி ஆறு ஆழப்படுத்தப்பட்ட காரணத்தினால் மகாவலி கங்கை நீரின் வேகம் அதிகரிக்கப்பட்டு  கிராமத்தின் குடியிருப்புக்காணிகளையும் அரித்துக் கொண்டு செல்கின்றதுடன், மாரிக்  காலங்களில் எமது இறால்குழிக்  கிராமம் வருடா வருடம் மூழ்குவதுடன், வீடுகள் மற்றும் கிராமத்திலுள்ள எமது  வளங்கள் அனைத்தும் இழக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இந்நிலமையானது “மரத்தினால் வீழ்ந்தவனை  மாடு குத்தியது போன்று”மீண்டும் மீண்டும் வறுமைக்குள்ளாக்கிய வண்ணமே உள்ளது.

மேற்படி இரு நடவடிக்கைகளினால் எமது கிராம  மக்கள் படும்  கஸ்ரங்களை வலியுறுத்தி  கடந்த 2012ம் ஆண்டிலிருந்து இன்று வரை  எமது கிராம  சங்கங்கள் மற்றும் பொது மக்கள் என பலரும்   இறால்குழி கிராம அதிகாரிகள், மூதூர் பிரதேச செயலாளர்கள்,திருமலை மாவட்ட அரசாங்க அதிபர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், நல்லாட்சி அரச  காலத்தில் எதிர்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மேன்மை தங்கிய ஜனாதிபதி ஆகியோருக்கும்  மனுக்களை வழங்கியிருந்ததுடன், எமது  அடிப்படை உரிமைகளை மீறும் அரச மற்றும் முதலாளிகளின்  நடவடிக்கைகளைக் கண்டி கவனயீர்ப்பு போராட்டங்களையும் மேற்கொண்டோம்.

அத்துடன் கடந்த 29.05.2017 அன்று எதிர்கட்சித் தலைவர் கௌரவ.இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரைரெத்தினசிங்கம், திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் ,இறால்குழி விவசாய சம்மேளனத் தலைவர்  திரு.த.தங்கராசா  மற்றும்  கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திரு.இ.கணேசலிங்கம் ஆகியோர் கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவகத்தில் ஒன்று கூடி மண் அகழ்வு தொடர்பான விடயங்களை கலந்துரையாடியிருந்தோம்.

இக்கலந்துரையாடலின்  நிமிர்த்தம் அரசாங்க அதிபர்  அவர்களால்  உரிய மண் அகழ்வு அனுமதிக்கான அதிகாரியை  அழைத்து மண் அகழ்வதற்கான அனுமதிகளை ரத்துச் செய்யுமாறும் உத்திரவிட்டதுடன், மணல் அகழ்வு இடம் பெறுகின்ற இடங்களில் காணப்படுகின்ற  இயந்திதரங்கள் மற்றும் பொருட்களை அவ்விடத்திலிருந்து  வெளியேற்றுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த  31.05.2017 ம்  திகதியிலிருந்து  இம் மண் அகழ்வு நடவடிக்கையானது இன்று வரை இரவு பகலாக  மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

அதுபோன்றுதான் எமது கிராம விவசாயிகள் தங்களது  தொழில்களை மேற்கொண்ட பகுதிகளுக்கு  செல்ல வன இலாக திணைக்கள அதிகாரிகளால் இன்றும் தடுக்கப்பட்டே வருகின்றனர்.

எனவே யுத்தத்தின் கொடுரத்தினால் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது நலனைக் கருத்தில்  கொண்டு கீழ் குறிப்பிடப்படும்  பிரச்சினைகளுக்கான  தீர்வுகளைப் பெற்றுத்  தருமாறு தயவாக வேண்டி நிற்கின்றோம்.

1.   மகாவலி கங்கையின்  நீர் கடலுக்கு சென்றடையும் நன்னீர் ஆற்றின் இரு மருங்களிலுமுள்ள  எமது மக்கள்  காலம் காலமாக ஜீவனோபாயத் தொழில் மேற்கொண்ட  பரவிப்பாஞ்சான்,பன்வெட்டுவான்,தோணித்துறைமடு, மணலோடை, முள்ளிமடு, கிவிளையடி, நுளம்பான்தீவு, சாணாமடு ஆகிய பகுதிகளில் வன இலாக திணைக்களம் தடுப்பதை நிறுத்துதல்.

2.   1 இல் குறிப்பிட்ட விவசாயப் பகுதிகளில் எம்மால் விண்ணப்பித்த 450 பேருக்குமான  அனுமதிப் பத்திரம் வழங்ஙகல்-கமநலச் சேவை நிலையம், மூதூர்.

3.   எமது மக்களின் தொழிலையும், கிராமத்தின் வளங்களையும் அழிக்கும் மண் அகழ்வின் அனுமதியினை மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் திருமலை மாவட்ட  அரசாங்க அதிபர்  ஆகியோர் வழங்காதிருத்தல்.

4.   கிராமத்தின் மண் அரிப்பினைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவர்கள் மற்றும் மர நடுகைகளை  இறால்குழி கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் கங்கை ஓரங்களில் அமைத்தல். வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.