மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார், பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை – யோகேஸ்வரன் பா.உ

மட்டக்களப்பு மாவட்டத்தில் அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்துவத்துக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிமுதல் பகல் 12 மணிவரை தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களைத் தடைசெய்யும் தீர்மானம் ஒன்றை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் நிறைவேற்ற இருக்கிறோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பகல் நடைபெற்ற தேசிய இந்து சமய அறநெறிக கல்வி விழிப்புணர்வு வாரத்தின் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்..

அறநெறிக்கல்வியானது ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒழுக்கத்துக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. அறநெறிக்கல்வி சரியான முறையில் வழங்கப்படாமை காரணமாகவே வன்முறைகளும் பிரச்சினைகளும் தோன்றுகின்றன. இதனை சரியான வழிமுறைப்படுத்தவதற்காக எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

கடந்த காலங்ககளில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கான தடை அல்லது ஒழுங்கு படுத்தலானது சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மீண்டும் இதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் இத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

பெற்றார் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அதே வேளை ஒழுக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொள்ளும் வகையில் அறநெறிக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

அறம் இல்லையானால் மனிதனுடைய வாழ்க்கை முழுமையடையாது. முன்பெல்லாம் குருகுலக்கல்வி என்று சொல்லுவார்கள். அது மன்னனாக இருந்தாலும் சிறு பராயத்திலேலே குருகுலக்கல்விக்குப் போக வேண்டும். இராமாயணத்தில் வசிட்டரிடம் ராமன் குருகுலக்கல்விக்காகச் சென்றான்.

ஆனால் எங்கள் முறையில் பாடசாலைக்கல்வி வந்தவுடன் ஒரு பரீட்சைக்கான கல்வியாக மாறிவிட்டது. வாழ்க்கை முறையைக் கொண்டு நடத்தவத்றகானதாக மாறிவிட்டது. ஆனால் அறநெறிக் கல்விஎன்பது பிள்ளையின் வாழ்வியலில் தங்கி நிற்கிறது. சிறுபராயத்திலிருந்தே நல்ல பண்பாடுகள் பழக்கவழக்கங்கள் அறநெறிக் கல்வியில் சொல்லப்படுகிறது.

அறநெறி என்பது சரியாகப்பின்பற்றப்படாமையினால்தான் பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகிறது. சிறுபராயத்தினரிடையே மதுபானக்கலாச்சாரம் செல்போன் கலாச்சாரம் வந்துவிட்டது. சிறு பராயத்தில் அறநெறியில் ஒழுக்க விழுமியங்களைச் சரியாக கற்று வந்திருந்தால் இவைகளுக்கெல்லாம் தீர்வுகள் கிடைத்திருக்கும். இந்துக்கள் வாழ்வியலை முற்றுமுழுதாக ஆன்மீகத்தோடு வைக்க வேண்டியவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கேள்வி கேட்பவர்களாக இருக்கிறோம். கண்ணகி வழிபாடு என்பது பக்தி நெறியினை முழுக்க முழுக்க கற்றுத்தருவதாகும். ஆனால் அதனை இலக்கியமாக மட்டுமே பார்க்கிறோம்.

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் வைத்தியராக பொறியிலாளராக கணக்காளராக வரவேண்டும் என்று எண்ணுகிறார்கள் ஆனால் சமூகத்தில் நல்ல ஒழுக்க விழுமியங்களுடன் எனது பிள்ளை வாழவேண்டும் என்பதனை மறந்து விடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தேசிய இந்து சமய அறநெறிக கல்வி விழிப்புணர்வு வாரத்தின் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை பகல் நடைபெற்றது.

இதில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ஜீ.சிறிநேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.நவேஸ்வரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், ஆசியுரையினை மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வர சர்மாவும், தலைமையுரையினை மேலதிக அரசாங்க அதிபர் வழங்கினார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரின் வழிகாட்டல் மற்றும் அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்து சமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் இந்த விழிப:புணர்வு வாரம் இம் மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திடுவீர் என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றன. இதற்கு மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், நன்காடையாளர்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்பொது அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், அறநெறிக் கல்வி ஊக்குவிப்புக்கான கொடிவாரத்தின் மூலம் நிதி சேகரிப்புக்களும் நடைபெற்றன.

இக் கொடிவாரத்தின் பிரதான நிகழ:வு கொழும்பில் அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றிருந்ததுடன், மாவட்ட நிகழ்வுகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்திப் பிரிவுகள் ஊடாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.