ஒழுக்க விழுமியங்களுடன் வளர்ந்திருந்தால் குழந்தைகள் மீது கை வைத்திருக்க மாட்டார்கள் – சிறிநேசன்


அறநெறி , ஒழுக்க விழுமியங்களுடன் வளர்ந்து வந்திருந்தால் மூதூரில் அறநெறி வகுப்புக்களுக்குச் சென்ற குழந்தைகள் மீத குழந்தைக் மீது கை வைத்திருக்க மாட்டார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ஜீ.சிறிநேசன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பகல் நடைபெற்ற தேசிய இந்து சமய அறநெறிக கல்வி விழிப்புணர்வு வாரத்தின் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,,

அறநெறிக் கருத்துக்கள், அறநெறி வகுப்புக்கள் என்பவை முக்கியமானவை. மனிதனும் தெய்வமாவதற்கு மிகவும் அவசியமானது. பரீட்சையில் வெற்றிபெற்றால் போதும் , சான்றிதழைப்பெற்றால்போதும் என்ற அவசரக்கல்வி இருக்கின்றன. எனவேதான் அறம் சார்ந்த தர்மம் சார்ந்த கல்வியின் ஊடாக ஒழுக்க விழுமியங்களை சிறுபராயத்திலிருக்கும் போதே மனதில் பதிய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இளமையில் நல்ல பழக்கவழக்கங்களைப்பழகும் போது அது சிலையில் பதித்தது போன்று இருக்கும் என்றும் சொல்வார்கள்.

சுவாமி விபுலாநந்தராக இருக்கட்டும், சுவாமி விவேகானந்தரான இருக்கட்டும், கௌதம புத்தராக இருக்கட்டும், இயேசு நாதராக இருக்கட்டும், அல்லது நபிகள் நாயகமாக இருக்கட்டும் இவர்கள் மனித அவதாரமெடுக்கிறார்கள். விதிவிலக்காக இயேசுநாதர் ஒரு பரிசுத்த ஆவி மூலமாக ஒரு தெய்வாம்சமாகப்பிறந்தவர் என்று சொல்லப்படுகிறது.

மனிதர்களாகப்பிறந்து அவர்களுடைய நல்ல விடயங்கள் காரணமாக நாங்கள் பூசிக்கின்ற நேசிக்கின்றவர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். இந்த அறநெறிக்கருத்துக்கள் ஊடாகச் சென்றதன் மூலமாகத்தான் அவர்கள் மனிதர்களாகப்பிறந்து தெய்வாம்சமாக மாறியிருக்கிறார்கள்.

இன்று மனிதனாகப்பிறந்து பாதாள உலகக் கோஸ்டிகளாக மாறியவர்களும் இருக்கிறார்கள். கூலிக்குக் கொலை செய்கின்றவர்களாக, காரணமில்லாமல் கொலை செய்கின்றவர்களாகவும் இருக்கின்றன. அவர்கள் தீய பழக்கவழக்கங்களை பதித்துக் கொண்டவர்கள்.

அண்மையில் கூட மூதூரில் நடைபெற்ற சம்பவத்தினைப் பார்த்தீர்களானால் அறநெறி வகுப்புக்களுக்குச் சென்ற குழந்தைகளை குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆங்காங்கே இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அறநெறி , ஒழுக்க விழுமியங்களுடன் வளர்ந்து வந்திருந்தால் குழந்தைகள்  மீது கை வைத்திருக்க மாட்டார்கள். குழந்தைகளாகவே நினைத்திருப்பார்கள். ஆகவே கட்டுக்கடங்காத காமுகர்களாக இருந்து கொண்டு காம வெறிகளைக் கொட்டுவதற்குக்கூட இந்த அறநெறியில்லாத கல்விதான் காரணமாக இருக்கிறது. எனவே தான் இளம் பராயத்திலிருந்து அறநெறிக்கல்வியினை சிறுபராயத்திலிருந்து பதிய வைப்பதன் மூலம் நல்ல சமூதாயத்தினை உருவாக்கலாம்.

இன்று அரசியல் வாதிகளாக இருக்கலாம், அதிகாரிகளாக இருக்கலாம், சிவில் செயற்பாட்டில் இருப்பவர்களாக இருக்கலாம். ஊழல் மோசடி, ஒழுக்கவீனங்கள், கையூட்டுக்கள் நடைபெறுகின்ற போது அறநெறிகள் அங்கு சரியான முறையில் பலினமாகவில்லை என்பது தெரிகின்றது. இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களும், அவற்றினை செய்தவர்களை மூடி மறைக்க முற்படுகின்றவர்களும், உண்மையில் அறநெறியின் பால் ஈர்க்கப்பட்டவர்களாக இருக்க முடியாது என்றார்.