மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தின நிகழ்வுகள்.

தேசிய இந்து சமய அறநெறிக கல்வி விழிப்புணர்வு வாரத்தின் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை பகல் நடைபெற்றது.

இதில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ஜீ.சிறிநேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.நவேஸ்வரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், ஆசியுரையினை மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வர சர்மாவும், தலைமையுரையினை மேலதிக அரசாங்க அதிபர் வழங்கினார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரின் வழிகாட்டல் மற்றும் அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்து சமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் இந்த விழிபபுணர்வு வாரம் இம் மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திடுவீர் என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றன. இதற்கு மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், நன்கொடையாளர்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், அறநெறிக் கல்வி ஊக்குவிப்புக்கான கொடிவாரத்தின் மூலம் நிதி சேகரிப்புக்களும் நடைபெற்றன.

இக் கொடிவாரத்தின் பிரதான நிகழ்வு கொழும்பில் அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றிருந்ததுடன், மாவட்ட நிகழ்வுகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்திப் பிரிவுகள் ஊடாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.