சோற்றுக்கு வழியின்றி தவித்தாலும் ஈனச்செயலில் ஈடுபடேன்.

அமைச்சராகப் பணிபுரியும் காலத்திலோ அரசியலுக்கு வர முன்னரோ எந்த ஊழல் மோசடிகளிலும் தான் ஈடுபட்டதில்லையெனத் தெரிவித்திருக்கும் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், சோற்றுக்கு வழியின்றித் தவிக்கும் நிலை வாந்தாலும் இவ்வாறான ஈனச்செயலில் ஈடுபடப்போவதில்லையென்றும் கூறினார்.

வடமாகாண சபையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக் குறித்து தன்னிலை விளக்கமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

என் மீது மட்டுமல்ல, சகல அமைச்சர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் நான் கையூட்டுப் பெற்றதாகவோ ஊழல் புரிந்ததாகவோ, நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகவோ விசாரணைக்குழுவினர் எங்கும் குறிப்பிடவில்லை.

அவர்கள் மட்டுமல்ல, எவர்களாலுமே இவ்வாறு குறிப்பிட முடியாது. இந்த இழிசெயலில், அமைச்சராகப் பணிபுரியும் இக்காலப்பகுதியிலோ அல்லது அரசியலுக்கு வர முன்னரோகூட நான் ஈடுபட்டதில்லை. வருங்காலத்தில் சோற்றுக்கு வழியின்றித் தவிக்கும் ஒரு நிலை வந்தாலும்கூட இவ்வீனச்செயலில்நான் ஈடுபடப்போவதில்லை.

ஆனால், நான் இத்தகையவன் என்ற ஒரு மாயத்தோற்றத்தை, என்பற்றிய தவறான ஒரு விம்பத்தைப் பொதுமக்களிடையே ஏற்படுத்தி எனது அரசியல் வாழ்க்கையை முடிவுறுத்தும் விதமாக இந்த அறிக்கை அமைந்துள்ளமை வருத்தமளிக்கிறது.

இந்த அறிக்கையில் விசாரணையின்போது நானும் திணைக்கள அதிகாரிகள் பலரும் தெரிவித்த பல விடயங்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை. நான் தெரிவித்ததாக தெரிவிக்காத விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிழையான விடயங்கள் அறிக்ைகயில் இடம்பெற்றிருக்கின்றன. மோசடி, ஊழல், கையூட்டு, நிதி விரயம் போன்ற சொற்களுக்கான அர்த்தச் செறிவுகள் வெவ்வேறானவை.

ஆனால், இந்த அறிக்கையை மேலோட்டமாகப் படிப்பவர்கள் தவறான முடிவுக்கு வரும் விதமாக இச்சொற்களை மனம்போன போக்கில் பயன்படுத்திவிட்டு, என்னைப் பதவி விலக வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவற்றின்மூலம் விசாரணைக்குழுவில் உள்ள சிலர் எப்படியாவது என்னைக் குற்றவாளியாக்கிவிட வேண்டும் என்ற முன்கூட்டிய முடிவுடன், ஏதோ ஒரு சூழ்ச்சி நிரலில் செயற்பட்டுள்ளார்கள் என்றே நான் கருதுகின்றேன்.

பணி செய்வதற்குப் பதவி அவசியம் இல்லை. கௌரவ முதலமைச்சர் அவர்கள் இடும் உத்தரவு எதுவோ அதனை நான் சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்வேன்.

ஆனால், பொய்யான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுடன் செல்வதற்கு மனம் ஒப்பவில்லை. அவ்வாறு செய்தால் செய்யாத குற்றங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டதாகிவிடும். இதனால் ஏற்படும் அவப்பெயர் தலைமுறைகளுக்கும் நீளும். அந்தவகையில் எனது தன்னிலை விளக்கத்தைக் கருத்தூன்றிக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Thinakaran