மட்டக்களப்பில் உலக ஆராய்ச்சி மாநாடு – 2017

போரும் போருக்குப் பின்னரான காலத்தும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றின் முக்கியத்துவமும்
……………………………………………………………………………….
பண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக் கூடியவை பற்றி பேசப்படுவதே அதிகமாதாகவும், அதிகாரபூர்வமானதாகவும் இருந்து வருகின்றது.
சிற்பம், ஓவியம், கட்டடம், இடம் என்பவை இந்தவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

சடங்குகள், கொண்டாட்டங்கள், ஆற்றுகைகள் உள்ளிட்ட சமூகப் பண்பாட்டுப் புளக்கங்கள், வாழ்வியல் செயற்பாடுகள் என்பவை வாழ்வை வடிவமைப்பதில் அதிக செல்வாக்கைக் கொண்டிருப்பினும் அதிக கவனத்தைப் பெறுவதாக இல்லை.

நாட்டுப்புற வழக்காற்று கற்கைகளில் இவை கவனத்தில் கொள்ளப்படினும் ஈழச் சூழலில் மேற்படி கற்கைகள் இன்னமும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பெற்றதாக இல்லை.

இந்நிலையில் போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன, முக்கியமான பங்கையும் ஆற்றிவருகின்றன.

போரனர்த்த அழுத்தங்களில் இருந்து விடுவிப்பு, இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற வேளைகளில் ஒன்றிணைத்தல், சமுதாயமயப்படுத்தல், வாழ்க்கையை மீளத்தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல், ஆற்றல்களைக் கொண்டாடுதல், உள்@ர் அறிவு, திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்குதல் எனப் பேசாப் பொருளாகவே இவை இயங்கி வருகின்றன.
மேலும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் ஆவணப்படுத்தலுக்கோ வணிகத்திற்கோ உரிய விடயங்களாகவே அதிகம் பரப்புரை செய்யப்படுகின்றன.
ஆனால் அவை மனித சமூகங்களின் வாழ்வியல் வளத்திற்கும், வாழ்வியல் இயக்கத்திற்கும் பங்களிப்புச் செய்பவை. தலைமுறைகளின் சுயாதீன இருப்பிற்கும் அதேவேளை கட்டுப்பாடுகள், கட்டுப்பெட்டித் தனங்களுக்கும் காலாயிருப்பவை.

எனவே உணர்ந்தும் உணராமலும், அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டிருக்கின்ற, பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும், அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் உலக ஆராய்ச்சி மாநாடு – 2016, பூகோளமயமாக்கற் சூழலில் பாரம்பரியக் கலைகள் என்ற தலைப்பில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் உலக ஆராய்ச்சி மாநாடு – 2017 அமைகிறது.
அறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி கலைஞர்கள், தொழில்முறையாளர்கள், உள்@ர் அறிவுதிறன் வல்லுனர்கள் என விடயங்களுடன் நேரடியான உறவையும் தொடர்பையும் இணைத்ததான சூழ்நிலையில் அமைந்த, முக்கியமாகப் பங்குகொள் செயல்மைய ஆய்வுகள் அதிக கவனத்திற்குரியவையாகக் கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக ஆராய்ச்சிகளுங்கூட ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த வகையிலான ஆராய்ச்சி மாநாடு, முன்னெடுக்கப்பட்டுவரும் ஆராய்ச்சி செயற்பாடுகளின் மதிப்பீடுகளுக்கான சந்திப்பாகவும், புதிய சிந்தனைகள், புதிய தொடர்புகளுடன் தொடர்ந்த முன்னெடுப்புகளுக்கான உந்து புள்ளியாகவும் அமைகின்றது.

ஜூன் 15 மாலை 6.00 மணிக்கு தொடக்க வைபவத்துடன் ஆரம்பமாகும் மாநாட்டின் அமர்வுகள் 16, 17ம் திகதிகளில் இடம்பெறும். விருப்பத் தெரிவுக்குரிய கலைப் பண்பாட்டுக் களப்பயணம் 18ம் திகதி இடம்பெறுகின்றது.