வீதிகளில் நடமாடும் கால்நடைகளை அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு வேண்டுகோள்.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில் நடாமாடும் கால்நடைகளை, உரிமையாளார்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு பிரதேசசபை செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை  செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

கால்நடைகளை உரிமையாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறும், கால்நடைகளுக்கென பிரதேசத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மணலேத்தம், காத்தமல்லியார்சேனை, புளுகுணாவை போன்றபகுதிகளுக்கு கொண்டு சென்று பராமரிக்குமாறும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சிறுபோக நெற்செய்கை ஆரம்ப கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கால்நடை உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

அறிவித்தல் வழங்கப்பட்டும் ஒருசில கால்நடைகள், தொடர்ச்சியாக இரவு நேரங்களிலும், பகல்வேளைகளிலும் வீதிகளில் நடமாடுவதினால் போக்குவரத்துச் செய்வதில் பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீதிவிபத்துக்களும் இடம்பெற்றுவருகின்றன. இதனால் உடனடியாக வீதிகளில் நடமாடும் கால்நடைகளுக்கு சொந்தமான உரிமையாளர்கள் கால்நடைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ளுமாறும், அவ்வாறு வீதிகளில் கால்நடைகள் நடமாடினால் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.