பதவி வகித்தால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்-நீதிபதி மா.கணேசராசா

(படுவான் பாலகன்) உயர்பதவிகள் வகிப்பது முக்கியமானதல்ல. பதவி வகித்தால் சிறப்பான சேவையை மக்களுக்கு செய்ய வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையில் சனிக்கிழமை(10) நடைபெற்ற மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் அனுசரணையில், இலங்கை சட்டக்கல்லூரி இந்து மகாசபை சட்ட மாணவர்களால் இச்சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நீதிபதி,

மக்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடுகின்ற போது வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படும். மக்களுக்கான சேவைகளை விரிவுபடுத்த வேண்டும். வெறுமனே பதவிகளை மாத்திரம் வகித்தால் போதாது. எங்களது பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் அக்கறையாக செயற்பட வேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் மோசமாக புறக்கணிக்கப்பட்டிருந்த போது, சட்ட உதவிகளை வழங்கியிருந்தோம். அதனை இன்றும் மறவாது இருக்கின்றனர், அப்பிரதேசத்து மக்கள்.

வளர்ந்து வருகின்ற சட்டத்தரணிகள், மக்களுக்காக சேவைகளை ஆற்ற வேண்டும். உயர்பதவிகள் வகிப்பது முக்கியமான விடயமல்ல. பதவி வகித்தால் சிறந்த சேவையை மக்களுக்காக செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பதவியில் இருந்தால் என்ன? இறங்கினால் என்ன? எந்தவொரு பிரியோசனமும் இல்லை. மக்களுக்காக சேவை செய்ய திட்டங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.