தாவரிப்பு , மணவிலக்கு வழக்குகள் அதிகரித்திருக்கின்றன.

(படுவான் பாலகன்) ஒரு காலமும் இல்லாத வகையில் நீதிமன்றத்தில் தாவரிப்பு வழக்கு, மணவிலக்கு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. என சிரேஸ்ட சட்டத்தரணி கே.நாராயணபிள்ளை தெரிவித்தார்.

இலங்கை சட்டக்கல்லூரி இந்து மகாசபை சட்ட மாணவர்களால் கொக்கட்டிச்சோலையில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை(10) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இதனைக்குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர், அங்கு உரையாற்றுகையில்,

சட்டக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு 100வருடங்களை கடந்துள்ள நிலையில்தான், சட்டக்கல்லூரியினால் படுவான்கரைப்பிரதேசத்தில் சட்ட ஆலோசனை வழங்குவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

முப்பது வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக படுவான்கரைப் பிரதேசம் இருக்கின்றது. இப்பிரதேசங்களுக்கு இவ்வாறான ஆலோசனைகள் மிகவும் அவசியமாவும் இருக்கின்றன. அதேவேளை இந்தப் பிரதேசத்தில் சட்டத்தரணிகளையும் உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இங்குள்ள மக்கள் தமது பிள்ளைகளை சட்டத்தரணிகளாக உருவாக்குவதற்கு கற்பிக்க வேண்டும்.

ஒரு காலமும் இல்லாத வகையில் நீதிமன்றத்தில் தாவரிப்பு வழக்கு, மணவிலக்கு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. நாளுக்கு நாள் இவ்வாறான வழக்குகள் அதிகரித்துச் செல்கின்றன. இதற்கு காரணம் பிணக்குகளை பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய, சமரசமாக நடந்துகொள்ளக்கூடிய, பொறுமையாக இருக்கக்கூடிய தன்மைகளை மக்கள் இழந்துவிட்டனர். சிறிய முரண்பாடுகளுக்கும் நீதி மன்றத்தினை நாடி வழக்கு தொடருகின்றனர். இவ்வாறான நிலையில்தான் சட்ட ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. என்றார்.