தமிழ் மக்களை அனாதைகளாக உணருகின்றேன்.

(படுவான் பாலகன்) சட்டம் தொடர்பில் எமது பிரதேச மக்களுக்கு தெளிவான அறிவில்லை. நீதிமன்றகளுக்கு செல்லுகின்ற போது, தமிழ் மக்கள் ஒரு அனாதைகளாகதான் உணருகின்றேன். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையில் சனிக்கிழமை(10) நடைபெற்ற, இலவச சட்ட ஆலோசனை வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைக் குறிப்பிட்டார்.

நீதிமன்றங்களுக்கு சென்று பார்க்கின்ற போது, தமிழ் மக்களை அனாதைகளாதான் உணருகின்றேன். ஏன்னெனில் அங்கு எங்களது மக்களாக கதைக்கின்றவர்கள் குறைவாகவே இருக்கின்றனர். எமது பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகளுக்கு ஆஜராக வந்தவர்கள் கூட எமது இனத்தினைச் சேர்ந்தவர்கள் அல்ல. சகோதர இனமக்களே ஆஜராக வந்தனர். இதனால் எங்களது விடயங்களை தெளிவுபடுத்துவதில் இடைவெளிகள் இருந்தன. இந்த இடைவெளிகள் சீர்செய்யப்படுவதற்கு எம்மவர்கள் அங்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததினால்தான் தமிழ் மக்களை அனாதைகளாக உணருகின்றேன்.

30வருடங்களாக எல்லாவற்றினையும் தொலைத்துவிட்டோம். அதனால் முதலில் இருந்துதாம் நாம் ஆரம்பிக்க வேண்டும். உடனடியாக எல்லாவற்றினையும் பெற்றுவிடவும் முடியாது. சிறிது சிறிதாக வளர்ச்சிபெற வேண்டும். இம்மக்களை மீண்டும், மீண்டும் கையேந்துபவர்களாக வைக்காமால், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாக மாற்ற வேண்டும். என்றார்.

இதன் போது, காணி பிரச்சினை, வீட்டு வன்முறைகள், கடன் நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு, பெண்கள், சிறுவர்களுக்கெதிராக புரியப்படும் துஸ்பிரயோகங்கள், போதைப்பொருளுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறான பிரச்சினைகளுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சட்ட ஆலோசனைகளை சட்டக்கல்லூரி மாணவர்கள், கனிஸ்ட சட்டத்தரணிகள், சிரேஸ்ட சட்டத்தரணிகள் மக்களுக்கு வழங்கினர்.