கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவோம். பட்டிருப்பு தொகுதியில் அமோக வெற்றியீட்டுவோம்.

(படுவான் பாலகன்) தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியலில் இறுதிப்பொழுதில் நின்றுகொண்டிருக்கின்றது. தேர்தலொன்று தற்போது இடம்பெறுமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் நாம் அமோக வெற்றியீட்டுவோமென தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடுகின்றோம். என ஐக்கியதேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையில் அமைக்கப்பட்ட புதிய சதொச கிளையின் திறப்பு விழா நிகழ்வு சனிக்கிழமை(10) இடம்பெற்ற போதே, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அங்கு அவர், உரையாற்றுகையில்,

தமிழ்தேசிய கூட்டமைப்பினைப் போன்று காலத்துக்கு காலம் வருகைதந்து வாக்குகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்தில் உள்ள ஆசனங்களுக்கு சூடுகொடுக்க வந்த அரசியல்வாதி நானல்ல. எந்த அரசாங்கம் வருகின்றதோ அந்த அரசாங்கத்தோடு இணைந்து மக்களுக்கு அபிவிருத்திகளை பெற்றுக்கொடுப்பதனையே நோக்காக கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களை இன்னும், இன அரசியலைபேசி ஏமாற்ற முடியாது. கிழக்கு மாகாணத்திலே, அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து மாகாணசபையை அமைக்கப்போகின்றோம் என்றார்.