மகிழடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகியம்மன் ஆலய வரலாறு

இலங்கை திருநாட்டின் கிழக்குப்புறத்திலே மீன் மகள் பாட வாவி மகள் தாலாட்ட நில வளமும் நீர் வளமும் கொண்டதுதான் மட்டக்களப்பு தமிழகமாகும்.
மட்டக்களப்பு தமிழகத்திலே தென்மேற்கு கரையிலே 07 மைல்களுக்கு அப்பால் மருதம் கொழிக்கும் மான்புறு கிராமந்தான் மகிழடித்தீவு கிராமமாகும். இக் கிராமத்திலே கி.பி 14ம் நூற்றாண்டிற்கு பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றதே மகிழடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகையம்மன் ஆலயம் என வரலாறுகள் கூறி நிற்கின்றது. இப்படிப்பட்ட ஆலயம் இப்பிரதேசத்தில் மிகவும் தொன்மையானது. பழமையானது என்று கூறின் யாரும் மறுப்பதற்கு இல்லையெனலாம்.


இவ்வாலயம் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்தே கண்ணகையம்மன் ஆலயத்தில் 1951ம் ஆண்டு வரை கட்டாடி முறையிலே சடங்குகள் செய்யப்பட்டு வந்ததாக தகவல்கள் கூறிநிற்கின்றன. அதற்கு பின்னர் நிருவாக முறையானது குடி வழியிலே நடைபெற்றிருக்கின்றது. கலிங்க குலத்திற்கு-02 பேர் உலகிப்போடி குடியினருக்கு-02 பேர் படையாட்சி குலம்- 01நபர், பெத்தான் குடிக்கு-01 நபர் என மொத்தமாக 08 பேர் நிருவாகத்தில் அங்கம் வகித்தனர். இந் நடைமுறை 1969ம் ஆண்டு வரை நிலைத்து நிற்கின்றதை வரலாற்று தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
மேலும் 1969ம் ஆண்டிற்கு பின்னரான காலப்பகுதியில் வட்டார முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 02 பேர் நியமிக்கப்பட்டு அமரர்.திரு.க.கனகநாயகம் இளைப்பாறிய அதிபர் அவர்களின் தலைமையிலான நிருவாகம் தனது பணியை சிறப்பாக மேற்கொண்டது. 1976ம் ஆண்டு முன்பிருந்த கண்ணகையம்மன் கோயில் இடிக்கப்பட்டது. இவ்வேளை தலைவராக திரு.க.கனகநாயகம் செயலாளராக அமரர்.உ.கனகசபை பொருளாளராக அமரர்.க.அழகிப்போடி ஆகியோர் நிருவாகத்தை வழி நடத்தினர். இவ் நிருவாகத்தினர் சிறப்பாக குடிவழி கட்டமைப்பையும் வட்டார முறை நிருவாக கட்டமைப்பையும் வழி நடத்திய பெருமை இவர்களையே சாரும் எனலாம்.


முன்பிருந்த கண்ணகையம்மன் கோயில் 03-06-1948ம் ஆண்டு கும்பாபிடேகம் நடை பெற்றதாக வாய்வழிக்கதைகள் கூறி நிற்கின்றன. அதேபோல் இவ்வாலயத்திலே அமைந்துள்ள விநாயகர் ஆலயம் ஆரம்பத்தில் செல்வ விநாயகர் ஆலயம் என்றே அழைக்கப்பெற்றது. இவ்வாலயத்தில் முதலில் 1918ம் ஆண்டு கும்பாபிடேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவ்வாலயம் குட்டைக்கற்களாலும் நீற்றினாலுமே கட்டப்பட்டிருந்ததை இடிக்கின்ற போது அவதானிக்க முடிந்தது. இவ்வாலயத்தை அமரர்.ஞானமுத்து சிவசண்முகம்  அவர்களின் தாயாரின் தந்தையார் கோட்டையார் கட்டியதாக அறியக்கிடக்கின்றது. இவ்வாலயம் 1982ம் ஆண்டு (1978ம் ஆண்டு வீசிய பாரிய சூறாவளியின் பின்) அமரர்.க.மகேஸ்வரலிங்கம் அவர்களின் தலைமையின் கீழான நிருவாகத்தினரால் 64 வருடங்களின் பின்னர் பாலத்தாபனம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய ஆலயம் அமைக்கும் நோக்கில் கோட்டையார் கட்டிய கோயில் உடைக்கப்பட்டது.
அதன் பின்னர் தற்போதுள்ள விநாயகர் ஆலயம் தலைவர் திரு.பொ.நேசதுரை அதிபர் செயலாளர் திரு.த. தியாகராஜா அதிபர் திரு.பொ.நல்லரெத்தினம் ஆகியோர் கொண்ட நிருவாகம் 21-04-1994ம் ஆண்டு சித்திரை 08ம் நாள் இடபலக்கினம் கூடிய சுப வேளையில் முற்பகல் 9.21 மணி பெரிய கல்லாற்றை சேர்ந்த முத்துலிங்கம் ஆச்சாரி அவர்களின் தலைமையில் சிவஸ்ரீ லோகநாதக்குருக்கள். தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகசுந்தரக்குருக்கள் ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக்குருக்கள் (சிவம்) மகிழடித்தீவு ஸ்ரீசித்தி விநாயகர் கண்ணகையம்மன் ஆலயம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ் கல்நாட்டு வைபவத்தின் போது விசேடமாக காயத்தரி சித்தர் முருகேசு சுவாமிகளால் அன்பளிப்பு செய்யப்பட்ட பாண லிங்கங்கள் அடங்கிய பேளை விநாயகர் ஆலயத்தில் நாட்டப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.
இந்நிருவாகமே. 1976ம் ஆண்டு உடைக்கப்பட்ட கட்டுமான வேலைகள் பூர்தியடையாத நிலையில் காணப்பட்ட கண்ணகையம்மன் ஆலயத்தை 1992ம் ஆண்டு நிருவாகத்தை பொறுப்பேற்ற கையோடு துரிதமாக செயற்பட்டதன்பேறால் 02-06-1993ம் ஆண்டு கண்ணகையம்மன் கோயில் ஆவர்த்தன பிரதிஷ்டா மகாகும்பாவிசேகம் எனும் பெயரில் நடைபெற்றது சிறப்பம்சமாகும்.
17-05-2002ம் ஆண்டு மீண்டும் தற்போது கிரகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் 20 வருடங்களின் பின்னர் விநாயகர் பாலஸ்தாபனம் 2வது தடவையாகவும் செய்து வைக்கப்பட்ட பெருமையும் இங்கேதான் நடைபெற்றது. இதனை வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் ஐயா அவர்கள் நடாத்தி வைத்தார்கள். இவ்வேளை ஆலயத்தில் குமாரசுவாமி குருக்கள் பிரதம குருவாக இருந்து பணியாற்றியமை குற்ப்பிடத்தக்கது. மேலும் 03-09-2006 இல் ஸ்ரீ சித்தி விநாயகருக்கு புனராவர்தன மகா கும்பாவிடேகமும் கண்ணகையம்மனுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிடேகமும் ஒரே நாளில் நடைபெற்றது விசேடமாகும் கும்பாபிடேக கிரியைகள் 31-08-2006 இல் ஆரம்பித்து எண்ணெய்க்காப்பு 02-09-2006 இல் நடைபெற்றது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும் இவ் வேளையில் தலைவர் திரு.பொ.நேசதுரை செயலாளர் திரு.த.தியாகராஜா பொருளாளர் செ.சிவகுமார் ஆகியோர் கொண்ட நிருவாகமே தனது பணியை மேற்கொண்டது எனலாம். இக் கும்பாவிடேகத்தை சிவஸ்ரீ இரா.கு.கோபாலசிங்கம் குருக்களும் (பிரதமகுரு) சிவஸ்ரீ மு.முத்துக்குமார குருக்கள் (சாதகாசிரியர்) அவர்களும் நடாத்தி வைத்தார்கள். முகப்பு வாசல் கோபுரமானது 06-04-2008ந் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கல்நாட்டப்பட்டது. இதனையும் திருவாளர் பொ.நேசதுரை அதிபர் தலைமையிலான நிருவாகமே மேற்கொண்டது. நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
முகப்பு வாசல் கோபுரமும் முருகன் கோயில் கும்பாவிடேகமும் ஒரே தினத்தில் நடைபெற்றது. 02-06-2014ந் திகதியாகும். எண்ணெய்க்காப்பு 01-06 2014ந் திகதி நடைபெற்றது விசேடமாகும் இவ்வேளை திரு.க.சுந்தரலிங்கம் தலைவராகவும் செயலாளர் திரு.செ.சிவகுமார் பொருலாளர் திரு.வி.கிருசாந் ஆகியோர் கொண்ட நிருவாகம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதே போல் இன்று 01-06-2017ந் திகதி திருவாளர்.க.திருநாவுக்கரசு அவர்களால் கிரகதம்பிரான் ஆலயமும் அமரர்.ஞா.சிவசண்முகம் குடும்பத்தினரால் சண்டேசுர கோயிலும் அமைக்கப்பட்டு புனராவர்த்தன மஹாகும்பாவிடேகம் நடைபெறுவது பாராட்டுதற்குரியதாகும். இவ்வேளை திரு.மு.அருட்செல்வம் தலைவராகவும் திரு.பொ.புப்பேந்திரன் செயலாளராகவும் திரு.தே.ஹேமச்சந்திரன் பொருளாளராகவும் பணிபுரிவதும், 2006ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து இன்றுவரை சிவஸ்ரீ.த.கோகுலதோசர்மா பிரதம குருவாக செயற்ப்பட்டு வருகின்றமை போற்றுவதற்குரியதாகும்.