மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் உருவாக்கம்

மாவட்ட மட்டத்தில் காணப்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிவில் சமூக அமைப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் அமைப்புக்களில் செயற்திறனை அதிகரித்து மேம்படுத்தும் நோக்கிலும் ஒருங்கிணைந்த அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்டு  மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்டுள்ளது..

அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சாக்கிய நாணயக்கார, உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் அரசாங்க அதிபர் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிவில் மற்றும் சமூக அமைப்புக்களின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார். மாவட்ட ரீதியில் சிவில் அமைப்புக்களின் சம்மேளனங்கள் அமைக்கப்படுவது பற்றிய விளக்கத்தினையும், அது தொடர்பான விதிமுறைகள் பற்றியும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சாக்கிய நாணயக்கார விளக்கங்களை வழங்கினார்.

அரச சார்பற்ற நிறுவனங்களாக மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டநிறுவனங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படுகின்ற மாவட்ட சிவில் அமைப்புக்களின் சம்மேளனங்கள் சமூகத் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்தலும் கண்காணித்தலும் 8ஆம் இலக்க 1998ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் கையாளப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களை ஒன்றிணைத்ததாக இந்த மாவட்ட சிவில் அமைப்புக்களின் சம்மேளனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இச் சம்மேளனத்தில் மாவட்டத்துக்கான தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகிய செயற்குழு உறுப்பினர்களும், அதற்கு மேலதிகமாக வாழ்வாதார அபிவிருத்தி, மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் அபிவிருத்தி, சிறுவர் அபிவிருத்தி, சகவாழ்வு மற்றும் சமாதானம், அனர்த்த முகாமைத்துவமும் முதலுதவியும், ஜனநாயகமும் மனித உரிமையும், அமைப்புக்களின் இயலுமையை விருத்தி செய்தல். முதியோரும் விசேட தேவைக்குட்பட்டவர்களும் ஆகிய உப குழுக்கள் நியமிபக்கப்பட்டு அவற்றுக்கும் தலைவர் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவராக சீ.பி.என். நிறுவனத்தின் எஸ்.பி.சில்வெஸ்ரர் தெரிவு செய்யப்பட்டார். இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் செயலாளராகவும், உலக தரிசன நிறுவனத்தின் ஜே.ஆர்.ரமேஸ்குமார் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவர், உப செயலாளர், உப பொருளாளர்களாக முறையே எம்.எஸ்.சள்மா கம்சா, எஸ்.எச்.இம்தியாஸ், ஆர்.கஜேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.