கிழக்கு தமிழ் மாணவர்கள் மீது தொடரும் அலட்சியப் போக்கு

நமது நாட்டின் தேசிய கல்விக் கொள்கையானது இலவசக் கல்வி, சமத்துவக் கல்வி, எல்லோருக்கும் கல்வி, பதினாறு வயது வரை கட்டாயக் கல்வி என்று பல பெறுமானங்களைக் கொண்டதாயுள்ளது. அதாவது நாட்டிலுள்ள சகல பிள்ளைகளுக்கும் உரிய வயதில் உயரிய, உரித்தான கல்வியை வழங்க வேண்டும். அதன் மூலம் நாட்டிலுள்ள அனைவரும் கற்றவர்களாக இருத்தல் வேண்டும் என்பது நமது நாட்டின் கல்விக் கொள்கையின் எதிர்பார்ப்பு.

அதற்காக அரசாங்கம் பாடசாலைகளை நடத்துகின்றது. அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர்களுக்காக அரசாங்கம் சம்பளம் வழங்குகின்றது. அவர்களுக்குப் பயிற்சிகளும் வழங்குகின்றது. மாணவ, மாணவியருக்கு இலவசமாகப் பாடப் புத்தகங்களும், சீருடைகளும் வழங்குகின்றது. சலுகையடிப்படையில் போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கின்றது..

இவ்வாறு அரசாங்கம் நாட்டின் எதிர்கால சமுதாயம் வளமுள்ளதாக, கல்வியில் மேம்பட்டதாக உருவாக வேண்டுமென்று பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயற்பட எத்தனிக்கின்றது. ஆனால், நாட்டின் தேசியக் கல்விக் கொள்கை அதாவது சகலருக்கும் உரிய சமத்துவமான, உயரிய கல்வியைப் பெறும் வாய்ப்பை வழங்க வேண்டிய கொள்கை பல்வேறு தரப்புகளால் முறியடிக்கப்பட்டு வருவதும் வெளிப்படுகின்றது.

ஒரு சமுதாயத்தின் உயர்வுக்கு கல்வி அவசியமானது. அதனால் அதனை உரியபடி வழங்க வேண்டும் என்பதை நாகரிக உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. நமது நாட்டில் பல பகுதிகளில் இந்த உயரிய நோக்கு மொழி, இன, மத, பிரதேச வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சிதைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. கல்வித் துறைசார் நிர்வாகக் கட்டமைப்பு சீராக இயங்காமையும் அதில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதும் இதற்கான காரணிகளாயமைந்துள்ளன.

சீர்செய்து நாட்டின் சகலருக்கும் ஒரே சீரான கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பை கல்வித் துறை நிறைவேற்றவில்லை என்பதுடன் உதாசீனத்துடன் நடந்துகொள்கின்றது என்றும் கருதமுடிகின்றது.

பெற்றுக் கொள்ளும் சம்பளத்திற்காக உரியபடி பணியாற்ற வேண்டிய அதிகாரிகள் தமது பதவியைப் பயன்படுத்தி கல்வித் துறையின் பின்னடைவுக்கும் வழி செய்கின்றனர் என்பதை வேதனையுடன் குறிப்பிட்டேயாக வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணக் கல்வி நிலை இதற்கோர் எடுத்துக்காட்டாகவுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகியவற்றிலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் அநேகமானவற்றின் தற்போதைய நிலைமை இதற்கோர் சான்றாகவுள்ளது.

பாடசாலைக் கல்வியின் நோக்கம் அங்கு பயிலும் மாணவ, மாணவியர் உரிய கல்வியைப் பெற்று பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வாழ்க்கையில் உயர்வுபெற வேண்டும் என்பதாகும். அதற்கு ஒத்துழைத்து, உதவி வழங்கி, வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள், ஆசிரியர்களின் சேவை மாணவருக்குத் தேவை.

அதனால், மாணவ, மாணவியரின் கல்வித் தேவையை பூர்த்தி செய்ய உரிய தகைமை பெற்ற ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குத் தேவைப்படுகின்றனர். அதிகாரிகளின் தேவைக்கோ, ஆசிரியர்களின் வசதிக்கோ அன்றி மாணவ, மாணவியரின் தேவையை முன்னிறுத்தியதாக ஆசிரிய பணி அமைய வேண்டும்.

அதை மறந்து பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிள்ளைகளின் தேவையைக் கவனத்தில் கொள்ளாது ஆசிரிய இடமாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவது வெளிப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளிலிருந்து பதிலீடு இன்றி பதினாறு ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். அதேபோல் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து ஏழு ஆசிரியர்கள் பதிலீடின்றி வெளி வலயங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வருடத்தில் மூன்று பொதுப் பரீட்சைகளான ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணதரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றுக்குத் தோற்றும் மாணவ, மாணவியர் தகுந்த கல்வி வழிகாட்டலின்றி பாதிக்கப்படுவதை கிழக்கு மாகாண கல்வித் துறை கவனத்தில் கொள்ளாது உதாசீனம் செய்துள்ளமையை இது வெளிப்படுத்துகின்றது.

ஏற்கனவே பல தமிழ்ப் பாடசாலைகளில் ஆரம்பப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட்ட சாதாரண தரப் பாடங்களுக்குமுரிய ஆசிரியர்களுக்குமான பெருமளவு வெற்றிடங்களுள்ள நிலையில் இருப்பதையும் பிடுங்கி எறியும் கல்வித்துறையின் செயற்பாடானது நாட்டின் கல்விக் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.

அண்மையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள தமிழ்த் தேசியப் பாடசாலையான கார்மேல் பற்றிமா கல்லூரியில் கல்முனைக் கல்வி வலயத்திற்கு வெளியில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உயர்தர வகுப்பில் தமிழ்ப் பிள்ளைகள் சேர்ந்து கற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மாற்றீடின்றி ஆசிரிய இடமாற்றம் இடம்பெறுவது திட்டமிட்ட நடவடிக்கையா என்று வினவத் தோன்றுகின்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும், ஏனைய கல்வித் துறைசார் அதிகாரிகளும் தமிழ்ப் பாடசாலைகளில் நிலவும் தேவைகளை குறிப்பாக ஆசிரிய ஆளணித் தேவைகளை உதாசீனம் செய்யாது கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாயுள்ளது.

பதிலீடின்றி ஆசிரிய இடமாற்றம் செய்வது, ஆசிரியர்களைத் தேவையினடிப்படையில் பகிர்ந்தளிக்காமலிருப்பது போன்றவை கல்வித் துறையின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். அதனால் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர இடமளிக்காமலிருப்பது கல்வித் துறையின் பொறுப்பாகும்.

இலங்கை மாறன்

Thanks

Thinakaran