பட்டிப்பளை பிரதேசத்தில் நாளொன்றிற்கு 24ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகம்

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினால் நாளொன்றிற்கு 24ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகிப்பட்டு வருவதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

பிரதேச சபைக்குட்பட்ட குளுவினமடு, பனிச்சையடிமுன்மாரி, வால்கட்டு, பட்டிப்பளை, அரசடித்தீவு, முதலைக்குடா, முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, கெவிளியாமடு, கச்சக்கொடிசுவாமிமலை, அம்பிலாந்துறை, கற்சேனை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கடுக்காமுனை, மாவடிமுன்மாரி, விடுதிக்கல் போன்ற கிராமங்களில் குடிநீருக்கு அதிக தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில், குறித்த இடங்களில் பிரதேச சபையினால் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

 

 

குறித்த பிரதேசசபை பிரிவில் இதுவரை 56நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகவெப்பம் நிலவி வருகின்ற நிலையில், கிணறுகள் மற்றும் குளங்களில் நீர்வற்று ஏற்பட்டு, குடிநீரின் தேவைப்பாடு அதிகரித்து வருகின்றது.

 

மாவட்டத்தில் அதிக வரட்சி நிலவி வருவதினால், கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. விவசாய நிலங்கள் சிலவும் கருகி காட்சியளிக்கின்ற நிலைமையும் உருவாகியுள்ளது.