ஆயிரம் மரக்கன்றுகளுடன் கொக்குவிலில் சர்வதேச சூழல் தினம்

சர்வதேச சூழல் தினம் இன்று கொக்குவிலிலும் ஆயிரம் மரக்கன்றுகளுடன் மிகுந்த சமூகப்பொறுப்புடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு, டெய்லி பூட் சிற்றி முகாமையாளர் இராஜரத்தினத்தின் தலமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினர்களாக நல்லூர் பிரதேச சபை செயலாளர் சுதர்ஜன், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் பேரின்பநாதன், சமூக ஆர்வலர் சகாதேவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நல்லூர் பிரதேசசபையும் டெய்லி பூட் சிற்றி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், டெய்லி பூட் சிற்றி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட சிறப்பித்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக பொலித்தீன் பாவனையை குறைக்கும் முகமாக டெய்லி பூட் சிற்றி நிறுவனத்தினர் சூழலுக்கு நேயமான மாற்றுப்பைகளை அறிமுகம் செய்து வைத்தனர். பிரதேச சபை செயலாளர் சுதர்ஜனால் இப்பைகள் வெளியிட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதேசத்தில் வீசிக்கிடந்த பொலித்தீன்கள் அகற்றப்பட்டதுடன் குப்பைமண்டிக்கிடந்த கால்வாய்கள் துப்பரவு செய்யப்பட்டன. பிரதேச சபை மற்றும் டெய்லி பூட் சிற்றி ஊழியர்கள் இணைந்து செய்த இந்நிகழ்வில் உக்கக்கூடிய மற்றும் உக்காத குப்பைகள் என பிரித்து துப்பரவு செய்தனர்.
பின்னர் டெய்லி பூட் சிற்றியினரின் அன்பளிப்பாக கல்லூரியை ஒட்டிய சாலையோரம் எங்கும் பெறுமதிமிக்க நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டன. நன்கு வளர்ந்த இம்மரங்கள் தென்பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட அரிய நிழல் மரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கொய்யா, மாதுளை, யம்பு, நெல்லி, தேக்கு மற்றும் கொண்டல் போன்ற பயன் தரும் ஆயிரம் மரங்கள் பகுதி மக்களுக்கு வழங்கி மரம் நடுவதன் அவசியத்தை எடுத்து விளக்கினர்.​.