“ஆரொடு நோகேன்” நாடக ஆற்றுகையும் சந்திரகுமாரும்.

“ஆரொடு நோகேன்” நாடகம், ஈழத்து அரங்க ஆளுமை கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட பாடசாலை நாடகமாகும். கட்டிளமைப் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்களை இவ்வயதுடைய பாடசாலை மாணவர்களைக் கொண்டு மூன்று குடும்பத்தினூடாகச் சொல்லப்பட்ட படைப்பாகவும் அமைகின்றது. பெற்றோர் எதிர்பார்ப்பதற்கும் பிள்ளைகளின் விருப்புக்குமான மோதல் இங்கு நாடகமாக்கப்பட்டுள்ளது. எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய எழுத்துருவாகவும் மிளிர்கின்றது. இதனை கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் சு.சந்திரகுமார் நெறியாள்கை செய்து அண்மையில் மேடையேற்றியிருந்தார். இவ் ஆற்றுகை அனைவரையும் கிறங்க வைத்ததாக பேசப்படுகின்றது.


சென்ற வருடம் நடிப்பதாக ஆரம்பமாகி தொடர் செயற்பாட்டினூடாக ஒத்திகை பார்க்கப்பட்ட இந்நாடகம் 25.05.2017 அன்று மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் இரண்டு தடவை காட்சிப்படுத்தப்பட்டது. நடிகர்கள் மிகத் திறமையாக தமது ஆற்றலை வெளிப்படுத்தி நடித்தனர். சுமார் 1250 பார்வையாளர்கள் இதில் பங்கு கொண்டிருந்தனர். நல்லதொரு நாடகத்தைப் பார்க்காத மாணவர்கள் இதனைப் பார்த்து கிறங்கிப்போயினர். என்றே கூறப்படுகின்றது. நாடகத்தின் ஆற்றுகை, அழகியல் அவர்களை பல உணர்வுகளில் ஆழ்த்தியது என்பது பார்வையாளர்களின் கருத்தாவும் இருக்கின்றன.
இந்நாடகத்தினை நெறியாள்கை செய்த சு.சந்திரகுமார் பற்றி பார்க்கின்ற போது, கூத்தரங்கில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். கண்டியரசன் தென்மோடிக் கூத்தில் ஆலப்பிள்ளையாகவும், அலங்காரரூபன் தென்மோடிக் கூத்தில் அலங்காரரூபனாகவும், மழைப்பழகம் சிறுவர் கூத்தில் பறையறைவோன் மற்றும் அரக்கனாகவும் வீரகுமாரன் வடமோடிக் கூத்தில் வேடன் மற்றும் முனிவராகவும், குருக்கேத்திரன் போர் வடமோக் கூத்தில் குருக்கேத்திரனாகவும் பாத்திரமேற்று ஆடி தனது கூத்தாளுமையை வெளிப்படுத்தியவர். இக் கூத்துக்களை ஆற்றுகையினூடாகக் கற்பிப்பதற்கான பொறுப்பாரசிரயராகவும் செயற்பட்டார். ஆடல் பாடல்களைப் பழக்கி பயிற்சிகளைக் கொடுப்பவர். கூத்தரங்கை ஆற்றுகை மையமாக 2012 இல் இருந்து கற்பிப்பவர். அவ்வாறு உருவானதில் மகிடிக் கூத்தும் குறிப்பிடத்தக்கது. இதனை மூன்று மதாங்கள் ஊருக்குள் சென்று இணைப்பாக்கத்தை மேற்கொண்டு முன்னெடுத்தவர். இதில் பொலீஸ் பாத்திரம் தாங்கி ஆற்றுகை செய்துள்ளார். கூத்தரங்கின் சரியான இயங்கு தள தொடர் செயற்பாட்டை சரியான முறையில் அணுகி ஆராய்ச்சி செய்ததோடு இதனை மாணவர்களுக்குக் கற்பித்து ஆராய்சிக்கு வழிப்படுத்துபவர்.
இவ்வாறான கூத்தின் ஆட்டம், பாட்டு அதன் செய்முறை, ஆற்றுகை நிகழ்வெளி எனப் பலவற்றில் தனது ஆளுமையை வெளிப்படுத்திய இவர் அப்பாரம்பரிய அரங்கில் ஆடி பெயர் பெற்ற மாணவர்களைக் கொண்டு “ஆரொடு நோகேன்” நாடகத்தை நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார்.
இதில் நடித்தவர்களை நடிப்பிலும், அரங்க நுட்பத்திலும் தேர்ந்தவர்களை மட்டும் தெரிவு செய்து பழக்கவில்லை. நெறியாளர் நுண்கலைத்துறையில் உள்ள அனைத்து மாணவர்களையும் இணைத்து பொருத்தமான பயிற்சி கொடுத்து நெறிப்படுத்தியுள்ளார்.
நடிகர்கள் மேடை அசைவு, பாத்திரவாக்கம், குரல் பயன்பாடு, உள உணர்வு வெளிப்பாடு என்பனவற்றைப் பொருத்தமாகக் கொண்டு தமது திறனை வெளிப்படுத்தினர். இவர்களது முழுமையான பயிற்சியே அவ்வாறு திறன்பட நடிக்க வழிவகுத்தது. தொடர் பயிற்சியினூடாகப் பொருத்தமான பாடல் மெட்டு, அதன் இசையினை நுண்கலைத்துறை மாணவர்களைக் கொண்டே பயிற்றுவித்து நாடகத்திற்கு உயிர்கொடுத்தார் நெறியாளர். பொருத்தமான ஒப்பனை, ஒளியூட்டுகை என்பன நாடகத்தை இன்னுமொரு தளத்திற்கு இட்டுச் சென்றது.
காத்திரமான படைப்பாக விளங்கிய மேடை நாடகம் பார்ப்போரின் பார்வையை ஆளவைத்தது. நடிகர்களின் நடிப்பும் குரல் வளமும் மேடை அசைவும் காத்திரமாக இருந்தது. நடிகர்களின் பாத்திர வார்ப்பும் அதன் வெளிப்பாடும் அரங்க ஆற்றுகைக்கு வலுச்சேர்த்தது. பார்ப்போராக வந்த மாணவர்கள் நல்லதொரு படைப்பைப் பார்த்து ரசித்த அனுபவத்துடன் சென்றனர்.
இந்நிகழ்விற்கு நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். ஈழத்து நாடக ஆளுமைகளான பேராசிரியர் சி.மௌனகுரு, நாடகச் செயற்பாட்டாளர்களும் விரிவுரையாளர்களுமான விமல்ராஜ், ரவிச்சந்திரன், செந்தூரன், விவேகானந்தராசா, மோகன், உமா, அற்புதன், தர்மா, துஜான், கோகிலவாணி ஆகியோரும் பாடசாலையில் நாடகமும் அரங்கியலும் கற்பிக்கும் சிரேஷ்ட மற்றும் இளம் பாடசாலை ஆசிரியர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக பாடசாலை மாணவர்கள், ஊர்மக்கள், நண்பர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நாடகத்திற்கு ஒளியமைப்பை கி.திருச்செந்தூரனும் ஒப்பனையை கா.அற்புதனும் ச.அனுஜாவும், மேடை முகாமை மற்றும் காட்சியமைப்பை வி.சசிகரனும் வி.விக்னேஸ்வரனும் இசையினை ஆ.ரேணுஜனும் நடனத்தினை சி.கிரிஜாவும் குரல் இசையினை இ.பிரியா, ச.சரண்யா, செ.வாரணன் ஆகியோரும் மிகவும் சிறப்பாகச் செய்து ஆற்றுகையினை வலுப்படுத்தினர். இதன் பிரதான கதாமாந்தர்களில் ரஞ்சித்குமாராக ரா.தனஞ்செயனும், சுபத்திராவாக த.நவராணியும், ஷங்கரியாக தி.பிரதீபாவும், ராஜ்குமாராக அ.சந்திரகுமாரும், செல்வராணியாக கு.கனிஸ்ராவும், ரஜீவ்வாக வி.கிருபானந்தமும், ஷீலாவாக ஜீ.விலோஜினியும், இராசதுரையாக வே.லோகுஜனும், சறோஜினியாக சோ.ஞானசக்தியும், ஆரணியாக ச.அனுஜாவும், அம்பிகையாக ந.தர்சினியும் நடித்தனர். கோரஸ் குழுவில் சி.கிரிஜா, ச.பிலிசியா, வி.விக்கினேஸ்வரன், பே.நிதாகர், வி.சசிகரன், கோ.மயூரி, பே.நிசாந்தினி ஆகியோர் நடித்தனர். தோல்வாத்திய இசையினை நூ.அ.நிப்றாஸ் சிறப்பாகத் தந்திருந்தார்.