கொக்கட்டிச்சோலைப் பகுதியில் இருவேறு குற்றங்களுக்காக இருவர் கைது

(படுவான் பாலகன்)கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் ஒருவரும், மாடு ஒன்றினை கடத்திச்; செல்ல முயன்றார் என்ற சந்தேகத்தில் கொக்கட்டிச்சோலை பகுதியில் இன்னும் ஒருவருமாக இருவர் வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொக்கட்டிச்சோலை பகுதியில் போக்குவரத்து கடமையில் வெள்ளிக்கிழமை மாலை ஈடுபட்ட பொலிஸார், முச்சக்கரவண்டி ஒன்றினை நிறுத்துமாறு சைகை பிறப்பித்த போது, நிறுத்தாமல் வேகமாக செலுத்திய முச்சக்கரவண்டியை இடைநிறுத்தி சோதனை செய்த வேளை முச்சக்கரவண்டியில் நான்கு கால்களும் கட்டப்பட்ட நிலையில் பசுமாடு ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், இதனை அடுத்து பசு மாட்டினை கடத்தி செல்ல முயன்றார் என்ற சந்தேகத்தில் வாகனத்தினை செலுத்தி சென்ற சாரதியும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு ஆற்றாங்கரைப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதன் போது, முனைக்காடு ஆற்றாங்கரைப்பகுதியில் உள்ள கண்ணா பற்றைக்குள் இருந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் பொலிஸார் கூறினர்.