பாதிக்கப்பட்ட மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

 இன்றைய தினம் காலையில் காலி மாவட்டத்தின் பத்தேகம பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் சிவன் அறக்கட்டளையும் பங்கேற்றது. இதில் வடக்கில் இருந்து வந்தோரும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்களுமாக 85 க்கு மேற்பட்டவர்கள் இணைந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். நிவாரணப்பணிகளில்  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் கணேஸ் வேலாயுதம், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தென் மாகாணசபை உறுப்பினருமான வணக்கத்துக்குரிய பத்தேகம சுமித்திர தேரர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்..

பிரதேசத்தில் பல வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்த போதிலும் இரு வீடுகளுக்கு மாத்திரமே தற்காலிக கூடாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் உரியவர்களை தொடர்புகொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக  செல்வம் அடைக்கலநாதன் பா.உ உறுதியளித்திருந்தார்..பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வணக்கத்துக்குரிய பத்தேகம சுமித்திர தேரர் அவர்களிடம் சிவன் அறக்கட்டளையின் சார்பில் மூன்று இலட்சம் பெறும்தியான காசோலையும் வழங்கப்பட்டது. வடக்கில் இருந்து வந்த குழுவினர் நாளையும் தங்கியிருந்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

மாலையில் களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டன.