ஆரையூர் கண்ணகையின் வரலாறும் வளர்ச்சியும் – ஓர் நோக்கு

கண்ணகி வழிபாடு தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பரந்து காணப்படும் வழிபாடாகவுள்ளது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் சேரன் செங்கூட்டுவனின் பெருவிழாவுமே அடிப்படையான பங்களிப்பினைச் செலுத்துகிறது..
பத்தினிச் செய்யுளாகவும் ஒரு முலையறுத்த திருமாவுன்னி,கண்ணகி பேகன் கதை முதலான தொன்மங்கள் உள்ள போதும் கண்ணகியின் வாழ்க்கையினை அவளது தெய்வீகப் பிறப்பினை என்றும் நிலைத்து நிற்கத்தக்க காவியமாக இளங்கோவின் சிலப்பதிகாரம் அமைகிறது. சிலப்பதிகார காவியத்தினை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல இலக்கிய வடிவங்கள் எழுந்துள்ளன.

மட்டக்களப்புப் பிரதேச தமிழ் மக்களிடம் வழங்குகின்ற ஈழத்து இலக்கியங்களுள் வீ.சி.கந்தையாவின் கண்ணகி வழக்குரை,வன்னிப் பிரதேசத்தில் சிலம்பு கூறல்,யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கோவலனார் கதை என்பன முக்கியமாக விளங்குகின்றன.
கண்ணகி வழக்குரையின் அமைப்பு சிலப்பதிகாரத்திலிருந்து வேறுபட்டது.சிலப்பதிகார வஞ்சிக் காண்ட நிகழ்ச்சிகள் எதுவும் கண்ணகி வழக்குரையில் அமையவில்லை.பாண்டிய மன்னனுடன் வழக்குரைத்த பின்னர் மதுரையை எரித்து,தணியாத கோபத்துடன் நின்ற கண்ணகியை இடைச்சேரி மக்கள் கோபம் தணிந்தருளுமாறு பாடிய குளிர்ச்சிக் காதையுடன் கண்ணகி வழக்குரை நிறைவுபெறுகிறது.

அவ்வகையில் க.சபாரெத்தினம் ,சொ.பிரசாந் ஆகியோரினால் தொகுக்கப்பட்ட ஆரையூர் கண்ணகி வரலாறும் வழிபாடும் என்ற நூல் ஆரையம்பதி பிரதேசத்தின் மாற்றப்பட்ட மறைக்கப்பட்ட தடயகளைத் தேடிய பயணமாக அமைகிறது.

ஆரையூர் பத்தினி தெய்வம் பற்றிப் பேசுவதனுடன் ஆரையம்பதியின் ஆரம்ப கால சமய சமூக பொருளாதார வரலாற்று ஆதாரங்களை சான்றாதாரங்களுடனும் ஆலய அமைவிடம் மற்றும் சடங்குகள் கண்ணகியின் அருள்மாட்சி அற்புதங்களையும் ஆரையூர் கண்ணகை மீது பாடப்பட்ட பாடல்களையும் தன்னகத்தே கொண்ட ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும் என்ற நூல் ஆரையூர் சமூகத்தின், சமூகக் கட்டுமானத்தினை விபரிப்பதாகவுள்ளது.

ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும் என்ற நூலின் முதல் இயலில் கி.பி 02 ஆம் நூற்றாண்டில் சேரன் செங்கூட்டுவன் அழைப்பின் பேரில் இலங்கை கஜபாகு மன்னன் அதிதியாக கலந்து கொண்டு, இலங்கைக்கு மீண்ட போது அங்கிருந்து கண்ணகி சிலையையும் காற்சிலம்பினையும் கொண்டு வந்து கந்தரோடைக்கு அருகிலுள்ள அங்காணாமைக் கடவையில் கண்ணகிக்கான கோயிலை கட்டினான் அதை தொடர்ந்து அநுராதபுரம், கண்டி ஆகிய நகரங்களுக்கும் பரவச் செய்தான் என்ற சரித்திரத்தை வெளிப்படுத்துவதாகவுள்ளது.
கண்ணகி ஒரு அவதாரப் பிறவி என்பதை கண்ணகியின் முற்பிறப்புக் ஐதீகக் கதைகளான மாங்கனிக் கதை,எண்ணெய் வாணிபர் கதை என்பவற்றுக்கூடாக அறுதியிட்டுக்கூறப்படுகிறது மற்றும் கண்ணகி வரலாற்றில் மீகாமனின் செயற்பாடு பற்றியும் துல்லியமாக எடுத்தாளப்பட்டுள்ளது.வீரமும் விவேகமும் உண்மையும் நேர்மையும் நிறையப் பெற்ற மிகச் சிறந்த கப்பலோட்டியாக கண்ணகி வழக்குரையில் சித்திரிக்கப்பட்டுள்ளான்.பெறற்கரிய கண்ணகியின் சிலம்பினுள் உள்ளீடுவதற்காக தனது விடா முயற்சியினால் நாகமணியை வென்று கொணர்ந்த மீகாமனை பார்த்து கண்ணகி தேவி,இந்த சாதனை புரிந்தமைக்காக உனக்கும் உன்னைச் சார்ந்த சமூகத்திற்கும் வரிசைகள் பத்தொன்பதாக உயர்த்தப்படுகின்றது என்று திருவாய்மலர்ந்தருளியதாகவும் கர்ண பரம்பரைக் கதையொன்றும் உள்ளது என எடுத்தாளப்பட்டுள்ளது.

இயல் இரண்டில் கடல் சூழ் கண்ணகை வழிபாட்டில் கி.பி 123 – 135 காலப்பகுதியில் மன்னன் சேரன் செங்கூட்டுவன் கண்ணகைக்கு பெருவிழா எடுத்திருந்தான். அவ்விழாவில் கலந்துகொண்ட கயவாகு மன்னனுக்கு சந்தன மரத்தால் செய்த கண்ணகையுருவமும் சிலம்பொன்றும் சந்தன மரப் பேளையில் வைத்து பாண்டிய மன்னன் அரசன் வெற்றி வேற் செழியனின் யானை மேல் சந்தனப் பலகையாற் செய்த பெட்டியையும் அரசனையும் ஏற்றி வேதாரணியம் சென்று அங்கிருந்து கப்பலில் அங்காணாமையைக் கடவையை அடைந்தது.அங்கே முதலாவது ஆராதனையும் நிகழ்த்தப்பட்டது.
அங்கிருந்து வேலம்பறை எனுமிடத்தில் வைகாசிப் பூரணையன்று கண்ணகிக்கு விழா நடந்தது.மீளவும் கரம்பகம்,கோவிற்குளம்,நாகர் கோயில்,வன்னிப்புட்டுக்குளம்,விழாங்குளம்,முள்ளியவளை,வற்றாப்பளை,சாம்பல்தீவு,திருகோணமலை,தம்பலகாமம்,பாலம் போட்டாறு,நீலாப்பளை வரையும் யானை ஊர்வலமாக சுமந்துகொண்டு வந்தது.
நீலாப்பளையிலிருந்து தாவளமாட்டின் மூலமாக கோராவெளி,கொக்கட்டிமூலைக்கு சந்தனப் பலகையால் செய்த அம்மனின் புனித சின்னங்கள் கொண்டு செல்லப்பட்டன.வந்தாறுமூலை,தாழை நகர்,மண்முனை,காத்தநகர்,செட்டிபாளையம்,வீரமுனை என கிழக்கிலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று பாணமை கதிர்காமம் கண்டி வரை கொண்டு செல்லப்பட்டது.கண்டியில் தலதா மாளிகையில் அச்சந்தணப் பலகையால் செய்த பெட்டி சேமிக்கப்பட்டுள்ளது என்பதை இந்நூல் மூலமாகவும் அறியக்கூடியதாகவுள்ளது.
வடஇலங்கையில் காணப்பட்ட கண்ணகை அம்மன் ஆலயங்கள் ஆறுமுகநாவலர் மற்றும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் வௌ;வேறு பெண் தெய்வ வழிபாடாக மாற்றமுற்றதையும் சிங்கள மக்களிடையே பத்தினி தெய்யோ வழிபாடாகவும் மட்டக்களப்பு பிரதேசத்தில் கண்ணகை வழிபாடு சடங்காக வேரூன்றி இன்றும் மக்கள் மத்தியில் இருப்புடன் ஆழ வேரூன்றியுள்ளதை, வருடாந்த வைகாசிச் சடங்குகள் உணர்த்தி நிற்கின்றன.

அம்மன் பத்தனின் நாவில் பூசை செய்யும் முறையை சொல்லிக்கொடுத்ததுடன் ஆரையம்பதி கண்ணகியம்மனின் முதலாவது கட்டாடியார் பத்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை பத்தக்கட்டாடியார் என ஊரவர் அழைக்க ஆரம்பித்தனர் என்ற வரலாற்றையும் எடுத்தியம்புகிறது.
கல்யாண கால் சுற்றுக்காவியத்தை பாட வைத்த அம்மனின் அருளினையும் கூறப்படுகிறது.மஞ்சந்தொடுவாய் கண்ணகியம்பாள் ஆலயத்தில் சடங்குகள் இடம்பெற்று ஆனி முழுமதி தினத்தில் திருக்குளிர்த்தியும் இடம்பெறும் வழக்கம் 1930 – 1935 காலப்பகுதிக்குள் வழக்கொழிந்து போயிருப்பதாக அறிய முடிகிறது.
பெரும்பாலான கண்ணகை அம்மன் ஆலய பத்தசி சடங்கு முறைகள், அம்மாளிடம் மண்டியிட்டு மன்றாடி வணங்குவதையே அடிப்படையாக கொண்டுள்ளது.அம்பாளுக்கு உச்சாடனம் பண்ணப்படும் மந்திரங்கள் தொடக்கம் போற்றிப் பாடப்படும் காவியங்கள் வரை இரந்து தன்னை அம்மையிடம் ஒப்படைத்து நீயே கதியம்மா என வழிபடும் ஆகமம் சாரா பத்ததி பூசை முறைமையினை ஆரையூர் சடங்கிலும் காணக்கூடியதாகவுள்ளது.

இயல் மூன்று ஆரையூர் கண்ணகியின் அமைவிடமும் அமைப்பும் பற்றி சிலாகிக்கிறது.அரசு மரத்தின் மீது இயல்பாகவே முளைத்து வளர்ந்திருக்கும் வேம்பு என்றும் இணைபிரியாத தம்பதியினர் போல ஆலய வளாகத்தில் காட்சி தருகிறது.அரசு மரம் சிவனின் பிரதிவிம்பம் வேம்பு சக்தியாகிய பார்வதியின் அடையாளச் சின்னம்.இவ்விரண்டும் இணையும்போது அங்கே சிவசக்தியின் அருள் மேலோங்கும் ஒரு தெய்வீக இடமாகவும் ஆரையூர் கண்ணகியின் அமைவிடம் கொள்ளப்படுகிறது.
1912 ஆம் ஆண்டில் இருந்து தற்போதைய கட்டுமானம் உள்ளதாகவும் அதன் மூலஸ்தான கருவறை அம்மனின் நேரடியற்ற அசரீரி,சங்கேத மொழிச் சமிக்ஞைகளால் இதுவரை புணருத்தாரணம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயல் ஐந்தில் பொதுவாக கண்ணகியாலயங்களில் இடம்பெறும் ஏழு நாட் சடங்குகளுள் திருக்கதவு திறத்தல் ஆராதனை,கல்யாணச் சடங்கு,கும்பம் ஊர் சுற்றல்,திருக்குளிர்த்தி,கப்பல்காரர் சடங்கு,பச்சை கட்டிச் சடங்குடன் காவடிகளும் நேர்த்திக்கடன்களும் கண்ணகி வழக்குரை போன்ற சடங்கு கால செயற்பாடுகளும் விபரிக்கப்படுகிறது.

இயல் ஆறில் ஆரையூர் கண்ணகியின் அற்புதங்களும் கண்ணகி வழக்குரை திருக்குளிர்த்திப் பாடலும் புலவர் நாவிதன் நாகனின் கல்யாணக்கால் சுற்றுக் காவியமும் சக்தி ஸ்ரீ.வி.பரிபூரணாந்த முதலியாரின் ஆரையம்பதி அம்பாள் வரலாற்றுக் காவியமும் கண்ணகை துதியும் கண்ணகையம்பாள் அகவலும் மு.கணபதிப்பிள்ளையின் ஆரையம்பதியம்பாள் அற்புதக் காவியமும் ஆரையூர் அருளின் கண்ணகி அம்பாள் காவியமும் அம்பாள் அடியாளின் கண்ணகையம்பாள் காப்பும் கவிக்கோ துரை வசந்தராசனின் கண்ணகி கவசமும் மூ.அருளம்பலத்தின் கல்யாண கூறை தாலி பாட்டும் கவிஞர் பால கம்சனின் கயலிசையாள் காவியமும் ஆரையூர் கண்ணகியின் வரலாற்று பாடல் வழிபாட்டை எடுத்தியம்புவதாகவுள்ளது.
நூலுக்கான பின்னிணைப்பினுள் 2013 ஆம் ஆண்டு ஆலயத் தோற்றமும் 2017 இல் ஆலய முகப்பும் சுற்று மண்டபமும் படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும் என்ற நூல் பதின்மூன்று கிராம சேவக பிரிவுகளைக் கொண்ட ஆரையம்பதி மண்ணின் வேர்களை சடங்கு சம்பிர்தாயங்களை வரலாற்று நோக்கில் ஆராய்வதாகவுள்ளது.கண்ணகையம்மன் ஆலயம் எவ்வாறு உருப்பெற்று வளர்ச்சியடைந்து பூசை முறைகள் எவ்வாறு பிரஸ்தாபிக்கப்படன என்பதை தெட்டத்தெளிவாக ஆதாரங்களுடன் விபரிக்கப்பட்டுள்ளது.

இந்நூலுக்கான தகவல்கள் அனைத்தும் மிக முக்கியமாக துறை சார்ந்த நூல்களிலிருந்தும் வாய்மொழி உண்மைத் தகவல்களாகவும் இருப்பது இந்நூலுக்கு மிகவும் வலுச்சேர்க்கின்றது.ஆரையம்பதி பிரதேசத்தின் மாற்றப்பட்ட மறைக்கப்பட்ட தடயங்களைத் தேடிய பயணமாகவே இந்நூலுள்ளது.
ஆரையூர் கண்ணகை மீது எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியாக இருந்த காவியங்கள் மற்றும் பாடல்களை இந்நூலினுள் உள்ளடக்கியது தனித்துவமாக அமைந்துள்ளது.மிக முக்கியமாக இற்றை வரைக்கும் கண்ணகி மீது கவசம்,காப்பு போன்றவற்றை எவரும் பாடியதேயில்லை.ஈழத்திலே முதன் முதலாக ஆரையூர் கண்ணகை மீதே கவிகோ துரை வசந்தராசானால் கணணகை கவசமும் அம்பாள் அடியாளினால் கண்ணகையம்பாள் காப்பும் பாடப்பட்டுள்ளது.இது ஒரு முதல் முயற்சியாகவும் உள்ளது.

ஆரையம்பதி பிரதேசத்தின் மாற்றப்பட்ட மறைக்கப்பட்ட தடயங்களைத் தேடிய பயணத்தில் பயணிக்கும் ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும் என்ற நூல் இலகுவாக எடுத்துரைக்கும் பாங்கில் கதை கூறுவது போல படைக்கப்பட்டுள்ளது.உண்மையிலேயே வாய்மொழித் தகவல்கள் இந்நூலில் முற்று முழுதாக கையாளப்பட்டுள்ளது என்பதை கதை கூறும் பாங்கின் ஊடாக அறிய முடிகிறது.

நூலின் முகப்பு அட்டைப்படம் சொ.பிரசாத் அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதாவது 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ஆரையூரில் கண்ணகை வழிபாடு சிறப்புற்று இருந்திருப்பதையும் அரசு மரத்தை சுற்றியே பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை முறையாக செய்திருந்தனர் என்பதை எடுத்துக்காட்டும் பொருட்டு தொகுப்பாசிரியர்கள் நூலின் அட்டைப் படமாக ஏறத்தாழ இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட தாவரச் சேர்க்கை பொருந்திய அரசு மரத்தினை முன் அட்டைப்படமாக வரைந்துள்ளதுடன் மரத்தின் வேர்களினையும் ஆலய முகப்புத் தோற்றத்தினையும் தெட்டத் தெளிவாக புலப்படுத்துவது ஏதோ ஒன்றை புடம்போட்டுக் காட்ட எத்தணிக்கிறது.

நூலின் பின் அட்டைப்படம் கண்ணகை அம்மன் பத்தாசி ஏடுகளையும் மரத்தின் கால வயதினையும் மறைமுகமாக குறிப்பிடுவதனுடன் புலவர் நாவிதன் நாகனவின் கண்ணகையம்மனுக்குரிய கல்யாணக்கால்; சுற்றுக்காவியமும் பொறிக்கப்பட்டுள்ளதுடன் கண்ணகையின் மங்களகரமான திருமண நிகழ்வையும்(மஞ்சள்) அவள் மதுரையை எரித்த பேர்து கோபத்துடனும் புரட்சியுடனும்(சிவப்பு) தென்படும் நிலையினையும் அவளது கோபம்(பச்சை) தணிந்த போது அவள் சாந்தமாகிய நிலையினை முன் மற்றும் பின் அட்டைப் படங்களின் வர்ணங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன.அதாவது கண்ணகியின் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் குணங்களை வெளிப்படுத்தும் வண்ணம் வர்ணங்கள் கையாளப்பட்டுள்ளது.

சுருங்கக் கூறின் ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும் என்ற நூல்,கண்ணகையின் வரலாற்றை மிகச் சுருக்கமாக கூற விழைவதுடன் ஆரையூர் கண்ணகையின் உருவாக்க வளர்ச்சியின் ஊடாக கண்ணகையின் அதியற்புதங்களை பழங்கால கதைகளை,எமது மரபு வழிச் சமூகத்தின் வேர்களை தேட முற்படுகிறது.பொதுவாக யாவராலும் படித்து பயன்பெறும் வகையிலேயே இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.

பாக்கியராஜா மோகனதாஸ்
(நுண்கலைமானி)