செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருந்திருவிழா நேற்று (02.06.2017)வெள்ளிக்கிழமை நண்பகல் 11.45 மணிக்கு கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.
ஆலயத்தில் நேற்றுக்காலை 07.00 மணிமுதல் விசேட அபிசேகம், பூசை இடம்பெற்று முற்பகல் 11.00 மணியளவில் வசந்தமண்டபப்பூசை இடம்பெற்று சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சகிதம் வீதி வலம் வந்து கொடியேற்றம் இடம்பெற்றது..
அந்தணர்கள் வேதம் ஓத, மங்களவாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோ~த்துடன் ஆலய பிரதமகுரு சிவாகம கிரியா ஜோதி பா.ஜோதிநாதக்குருக்கள் கொடியேற்றி வைத்தார்.
ஐரோப்பாவில் பல பகுதிகளிலிருந்து வந்த அந்தணர்கள் வேதம் ஓதினர். தாயகத்திலிருந்து வந்த நாதசுர – தவில் கலைஞர்கள் இசை முழங்கினர்.
ஆலய கொடியேற்ற விழாவை அடுத்து ஆலயக்கொடி, சென்மார்க்கிறெத்தன் கொடி, சுவிஸ் நாட்டுக்கொடி ஆகியன ஆலய முற்றத்தில் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
விசேட பூசையை அடுத்து ஆலயக்கொடியை அந்தணர்களும், சென்.மார்க்கிறெத்தன் கொடியை ஆலய நிர்வாகத்தினரும், சுவிஸ் நாட்டுக்கொடியை தொழில் அதிபர்களான புவனேஸ்,திரு ஆகியோரும் வைபவரீதியாக ஏற்றிவைத்தனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து ஆலய மகோற்சவத்திருவிழா காலையிலும் மாலையிலும் இடம்பெறுகிறது. இந்தத் திருவிழாவை சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடத்த ஆலய நிர்வாகத்தின் தலைவர் வே.கணேசகுமார் தலைமையிலான நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஆலயத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த வருடம் ஆலயத்திற்கு சிற்பத்தேர் ஒன்று தாயகத்திலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளது.
தாயகத்தில் புகழ் பூர்த்த சிற்பாச்சாரியார் விஸ்வப் பிரம்மஸ்ரீ ‘கலைமகுடமணி ” தியாகராசா பரமசாமி அவர்கள் தலைமையிலான சிற்பக்கலைஞர்கள் இந்தத் தேரை தாயகத்தில் வைத்து வடிவமைத்துள்ளனர்.
ஆலய மஹோற்சவத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு புதிய சித்திரத்தேரில் கதிர்வேலர் வலம் வந்து அருட்காட்சி வழங்கவிருக்கிறார்.
தேர்த்திருவிழாவுக்கு முதல்நாளான 9 ஆம் திகதி (09.06.2017) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு புதிய சித்திரத்தேரின் வெள்ளோட்டத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேரை வடிவமைத்த விஸ்வப் பிரம்மஸ்ரீ ‘கலைமகுடமணி” தியாகராசா பரமசாமி மற்றும் அவருக்கு உதவிய சிற்பாச்சாரியாரகள்; ஆகியோர் ஆலய நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்படவிருக்கின்றார்கள்.
தேர் வெள்ளோட்டத்தை ஒட்டி ஆலய நிர்வாகத்தினரும் தேர் உபகாரர்களும் இணைந்து சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிடவிருக்கின்றனர்.