அம்மாவைத் தேடிய யாழ். சிறுவன் சிக்கினான்

தன்னுடைய அம்மாவைத் தேடிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து, நடுவீதியில் திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த 12 வயதான, சிறுவனை தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் வைத்து, பொலிஸ் அதிகாரிகள் பிடித்துவிட்டனர் என்று, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28ஆம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவன், அதிகாலை மூன்று மணியளவில், சைக்கிளிலில் பயணிப்பதில் சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஆனந்த பெர்ணான்டோ, தன்னுடைய காரை அந்த சைக்கிளுக்குப் பின்னால் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், தோப்புவ பாலத்துக்கு அருகில், வீதிச்சோதனைச் சாவடியில், கடமையிலிருந்த பொலிஸார் அதிகாரிகளிடம், அந்த சைக்கிளில் பயணிக்கும் சிறுவன் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காருக்குப் பின்னால் பயணித்துகொண்டிருந்த சிறுவனை, அங்கிருந்த பொலிஸார் பிடித்து விசாரணை செய்தபோதே, மேற்படி விவகாரம் தெரியவந்துள்ளது.

சாவக்கச்சேரியைச் சேர்ந்த அந்த சிறுவன், கொழும்பில் வேலை செய்யும் தன்னுடைய தாயைத் தேடி, கடந்த 27ஆம் திகதியன்று சாவக்கச்சேரியிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்ட தனியார் பஸ்ஸொன்றில் ஏறியுள்ளார்.

அந்த சிறுவனிடம், பணம் இல்லாமையால், அச்சிறுவனை, பஸ் நடத்துனர். இடைநடுவிலேயே இறக்கிவிட்டுவிட்டார்.

அதாவது, புத்தளத்துக்கும் சிலாபத்துக்கும் இடைபட்ட பகுதியிலேயே அச்சிறுவனை, பஸ் நடத்துனர் இறக்கிவிட்டுவிட்டார். எனினும், தான் இறக்கிவிட்ட இடத்தில் இரண்டு சைக்கிள்கள் இருந்ததாகவும் அதில் ஒன்றை எடுத்துக்கொண்டே, கொழும்பை நோக்கிப் பயணித்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதி தொடர்பில் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. நீர்கொழும்புக்கு சென்று, விசாரித்தேன், நான் தமிழில் பேசினேன்.  அங்கிருந்தவர்களோ சிங்களத்தில் பேசினார்கள், எனக்கு சிங்களம் புரியாமையால், நான் பயணித்த வீதியிலேயே திரும்பியும் பயணித்தேன் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, அதிகாலையில் சைக்கிளில் பயணித்த அந்தச் சிறுவனைப் பிடித்து, தமிழ்மொழி பேசக்கூடிய அதிகாரியொருவரை அழைத்து, சிறுவனிடம் விசாரணை நடத்தியபோதே மேற்கண்ட விடயம் வெளியானது என்றும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை இல்லாத அந்த சிறுவன், பாட்டியிடமே வளர்ந்து வருவதாகவும், இந்நிலையிலேயே கொழும்பில் தொழில்புரிவதாகக் கூறப்படும் தன்னுடைய தாயைத் தேடி வந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், தாயையும் பாட்டியையும் தேடி கண்டுபிடித்து, அச்சிறுவனை ஒப்படைக்க உள்ளதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.