உயிரிழப்பு 203 ஆக உயர்வு; காணாமல் போனோர் 89; பாதிப்பு- 2 ,61 353

வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளதாக புதிய இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொகை 89 ஆக குறைந்துள்ள அதே வேளை பாதிக்கப்பட்ட மக்களின் தொகையும் 2 இலட்சத்து 61 ஆயிரத்து 353 ஆக குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று (31) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்: மழைகுறைந்துள்ளதால் ஆறுகளின் நீர்மட்டங்கள் பெருக்கெடுக்கும் நிலையில் இல்லை எனவும் மீட்பு பணிகளும் நிவாரண நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

முப்படையினர் வீதிகளை செப்பனிட்டும் ஏனைய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.காலி ,தெனியாய, பதுரலிய, கலவான, நிவிதிகல உட்பட பல பிரதேசங்களில் பிரவேச வீதிகள் மீளமைக்கப்பட்டுள்ளன. 5084 இராணுவத்தினரும் 907 படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், 9571 விமானப்டையினர் மீட்பு நடவடிக்கைகளை ​மேற் கொண்டுள்ளனர். இது தவிர மீட்பு பணிகளுக்காக 1050 படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.