ஆவணப்படுத்தும் விடயமாகவே பேரணிகள் அமைகின்றன.

(படுவான் பாலகன்) ஆவணப்படுத்தும் விடயங்களாக மட்டுமே பேரணிகள் அமைந்துவிடுகின்றன. என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் புதன்கிழமை(31) நடைபெற்ற போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரணியை நிறைவு செய்து உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

பல பேரணிகளை நடாத்துகின்றோம். அவற்றில் போதைப்பொருளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணிகள் ஆவணப்படுத்தும் பேரணிகளாக மட்டுமே அமைந்துவிடுகின்றன. ஏன்னெனில் கடந்த காலங்களிலும் இவ்வாறான பேரணிகளை நடாத்தியிருந்தோம். ஆனால் இன்று வரை போதைப்பொருள் பாவனை குறையவில்லை. எமது பிரதேசத்திலே உள்ள இரண்டு மதுபான நிலையங்களிலும் அதிகளவில் வியாபாரம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. அவற்றினையும் கடந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. உழைக்கும் பணத்தில் பெரும்பகுதியினை மதுவுக்கு செலவு செய்துசெய்கின்றனர். இவற்றினை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

மதுவுக்கு அடிமையாகியுள்ள ஒவ்வொரு கணவனையும், மதுப்பாவனையிலிருந்து விடுவிப்பதற்கு ஒவ்வொரு மனைவிமார்களும் அன்பால் முயற்சிக்க வேண்டும். இல்லாவிடின் பிள்ளைகளின் அன்பு வார்த்தைகளாலும் அவற்றிலிருந்து விடுவிக்க முடியும். பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றினை இழந்து கொண்டு செல்கின்றமையும் மதுவுக்கு அடிமையாக காரணமாகின்றன. அவற்றினை பின்பற்றுவதன் மூலமும் மதுப்பாவனையை கட்டுப்படுத்த முடியும். எனவும் மேலும் கூறினார்.