புகைத்தலால் அண்ணளவாக 60பேர் நாளொன்றிற்கு உயிரிழக்கின்றனர்.

(படுவான் பாலகன்) புகைத்தல் பாவனையினால் நாளொன்றிற்கு இலங்கையில் அண்ணளவாக 60பேர் உயிரிழக்கின்றனர். என மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் பூ.குணரெத்தினம் தெரிவித்தார்.

பட்டிப்பளைப் பிரதேச செயலகப்பிரிவில் இன்று(31) புதன்கிழமை நடைபெற்ற போதைப் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரணியினை நிறைவு செய்து உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளினாலையே அதிகளவு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் அதிகம் பேர் நோய்களுக்கும் உள்ளாகின்றனர். இலங்கையில் அண்ணளவாக 60பேர் நாளொன்றுக்கு புகைத்தல் காரணமாக உயிரிழக்கின்றனர். ஏனைய போதைப்பொருட்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். நகர்புறங்களில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்கு வேறுவடிவங்களில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றது. சில தனியார் மருந்தகங்களிலும் இவ்வாறான போதைப்பொருள்கள் விற்பனையாவதாக கூறுகின்றனர். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அனைத்து கிராம மக்களுக்கும் விழிப்புணர்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.